மீனவர்கள் நலனில் அக்கறை காட்டுபவர் பிரதமர் மோடி! - ஆளுநர் ஆர்.என்.ரவி
மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே பிரதமர் மோடியின் முதல் நோக்கம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது புதுப்பானையில் பொங்கலிட்டு அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, குழந்தைகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். தொடர்ந்து மீனவ மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், மீனவ மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த நாள்தோறும் எத்தனை கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர் என்பது தனக்கு தெரியும் எனவும், மீனவ மக்கள் நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மீனவர்கள் நலனின் பிரதமர் மோடி அதிக அக்கறை காட்டுபவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆளுநர் பங்கேற்ற இந்த பொங்கல் விழாவில் முதலில் தேசிய கீதம் பாடப்பட்டு, பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில், நிகழ்ச்சியின் இறுதியிலும் மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.