முடிவுக்கு வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் : ஒப்பந்த அம்சங்கள் என்ன? - சிறப்பு தொகுப்பு!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. போர் நிறுத்தம் எப்படி ஏற்பட்டது ? போர் நிறுத்த உடன்படிக்கையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் உள்ளன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாக ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்து செல்லப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, தீவிரவாத அமைப்பு என்று இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸை ஒழிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
காஸா போரில், 815 இஸ்ரேலிய மக்கள் உட்பட மொத்தம் 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 46,700 பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 1,410 குடும்பங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன,
மேலும் 3,463 குடும்பங்கள் ஒரே ஒரு உறுப்பினருடன் மட்டுமே உள்ளன. 35,055 குழந்தைகள் தங்கள் பெற்றோரைப் போரில் இழந்துள்ளனர். பெரும்பாலான பாலஸ்தீனிய மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் முயற்சித்து வந்தன. பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே போர்நிறுத்தம் குறித்து இறுதி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
உடன்படிக்கையில் இன்னும் தீர்க்கப்படாத பல அம்சங்கள் உள்ளதாக கூறியிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, விரைவில் அவை இறுதிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு,இஸ்ரேல் இராணுவ அமைச்சகமும்,இஸ்ரேல் அரசும், அனுமதி அளித்த பிறகே இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்று கூறப் படுகிறது.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல்,இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது அப்துல் ரஹ்மான் அல் தானி தெரிவித்திருக்கிறார். காஸாவில் போர்நிறுத்தம் மற்றும் இருதரப்பிலும் பிணைக் கைதிகள் விடுவிப்பு என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும்.
இந்நிலையில், காசா சிறையில் இருக்கும் 94 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும்போது, இஸ்ரேல் வசம் உள்ள ஏறத்தாழ 1,000 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. போர்நிறுத்த உடன்பாடு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டால், அது மூன்று கட்டங்களாக அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவதாக, ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தப்படும். காசாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறும். காசாவில் தேவையான மனிதாபிமான உதவிகளும் அனுமதிக்கப்படும். மேலும், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளடக்கிய 33 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதே எண்ணிக்கையில் இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். காஸாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படும். இந்த நடவடிக்கை உடன்படிக்கை ஏற்பட்டதிலிருந்து 16வது நாளில் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இடைக்கால போர் நிறுத்தம், நிரந்தர போர் நிறுத்தமாக மாறும்.
ஒப்பந்தத்தின் மூன்றாவது கட்டம் என்பது, காசாவின் மறுசீரமைப்பு தொடர்பானதாகும். மேலும், இதில் உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்கள் அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைக்கப்படும்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி தங்கள் பொறுப்புகளை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சரியாக மேற்கொள்கிறார்களா என்பதை கத்தார், எகிப்து,அமெரிக்கா, ஆகிய நாடுகள் உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றம் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகே, திங்கட்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவே போரின் கடைசி பக்கமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ள கத்தார் பிரதமர் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அமல்படுத்த அனைத்து தரப்பும் ஒத்துழைப்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் உளவு அமைப்பான Mossad மொசாத்தின் இயக்குனர் டேவிட் பார்னியா, இஸ்ரேல் பாதுகாப்பு நிறுவனமான Shin Bet தலைவரான Ronen Bar ரோனென் பார், மத்திய கிழக்குக்கான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆலோசகர் Brett MacGurk பிரட் மேக்குர்க், புதிய அதிபரான ட்ரம்பின் மத்திய கிழக்கிற்கான தூதுவரான Steve Witkoff ஸ்டீவ் விட்காஃப், மற்றும் கத்தாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி, இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட முக்கியமானவர்கள்ஆவார்கள்.
கத்தார் பிரதமரைத் தவிர, எகிப்தின் பொது புலனாய்வு அமைப்பின் இயக்குநருமான Hassan Rashad ஹசன் ரஷாத் பேச்சுவார்த்தை முழுவதும் ஹமாஸுடன் தொடர்பாளராக இருந்தார். மேலும்,ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு செயல் தலைவர் ((Khalil al-Hayya)) கலீல் அல்-ஹய்யா, பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தார். அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, ஏமன், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் என உலகின் பல்வேறு நாடுகளும் காசா போர்நிறுத்தத்தை வரவேற்றுள்ளன.
அமெரிக்க அதிபராக வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ள டிரம்ப், விரைவில் போரை நிறுத்தவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.