மூன்றாம் உலகப்போர்? ரஷ்யா அணு ஆயுத மிரட்டல், அலறும் உலக நாடுகள் - சிறப்பு கட்டுரை!
நடந்து வரும் உக்ரைன் ரஷ்யா போரில், அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்யாவின் இந்த முடிவு எதை காட்டுகிறது ? அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில் ரஷ்யா என்ன விதமான புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர் 1,000 நாட்களை கடந்துள்ளது. இந்த போரில், ரஷ்யாவுக்கு எதிராக, உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் நிற்கின்றன.
போர் தொடங்கிய நாளில் இருந்தே, ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வருகின்றன.
நீண்ட தூரம் சென்று இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்தது. எனினும், இந்த ஏவுகணைகளை ரஷ்ய எல்லைக்குள் செலுத்தி தாக்குதல் நடத்தக் கூடாது என்று உக்ரைனுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு விதித்திருந்தது.
ஏற்கெனவே, உக்ரைனுக்கு உதவுவதை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் தொடர்ந்து கூறி வந்தார். எனினும், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வந்தன.
அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை பயன்படுத்த உக்ரனைக்கு அனுமதி வழங்கினால், ரஷ்யா மற்றும் நேட்டோ இடையிலான போராக அது மாறும் என்றும் அதிபர் புதின் எச்சரித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் முடிவடையும் நிலையில், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு ஜோ பைடன் அனுமதி வழங்கி இருக்கிறார்.
நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கிய அடுத்த நாளே உக்ரைன் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ஏவிய ஐந்து ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த சூழலில், 2020 ஆம் ஆண்டில் அதிபர் புதினின் ஆணைப்படி அமைக்கப்பட்ட ரஷ்யாவின் அணுசக்தி கோட்பாட்டில் புதிய மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உக்ரைனுக்கு எதிரான போரில், அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி, அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டுடன் கூட்டணி வைத்துக் கொண்ட அணு ஆயுதம் இல்லாத நாடுகள், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால் , பதிலுக்கு அந்நாட்டின் மீது ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்றும், ரஷ்ய ஆயுத கொள்கையில் மாற்றம் கொண்டு வரப் பட்டுள்ளது.
குறிப்பாக, பாலிஸ்டிக் ஏவுகணை உட்பட நவீன ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ரஷ்யா மீது வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாலும், பதிலுக்கு ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், அணு ஆயுதங்கள் அல்லது பிற பேரழிவு ஆயுதங்களால் ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடுகளின் எல்லையைத் தாக்கினாலும், வெளிநாட்டில் உள்ள ரஷ்ய ராணுவப் பிரிவுகள் மீது தாக்குதல் நடத்தினாலும், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்றும், முக்கியமான ரஷ்ய அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவம் மீது தாக்குதல் நடத்தினாலும், ரஷ்யா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல்,ரஷ்யா மற்றும் பெலாரஸின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ராணுவ அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமான தாக்குதல்களை நடத்தினாலும் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன் படுத்தவும் அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
சூழ்நிலைக்கு ஏற்ப அணு ஆயுதக்கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ள ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், ரஷ்யாவுக்கு வேறு வழியில்லை என்றும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்றும் எச்சரித்திருக்கிறார்.
ரஷ்யாவின் அதிரடி முடிவால் ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ளது. மூன்றாம் உலகப்போர் அச்சத்திலும், அணு ஆயுத தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்திலும், பல நாடுகள் தத்தம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
குறிப்பாக , ரஷ்ய அதிபர் புதின் தனது மக்களுக்காக 'mobile nuclear bunkers' என்னும் நடமாடும் பாதுகாப்புப் பேழைகளை பெரிய அளவில் உருவாக்கி வருகிறார். 300,000 பவுண்டுகள் செலவில் கட்டப்பட்டுவரும் இந்த பாதுகாப்புப் பேழைகளில் 54 பேர் வரை தங்கலாம் என்றும், தேவை அதிகரிக்கும் பட்சத்தில், 150 பேர் தங்கும் வகையில் அதை மாற்றி அமைத்து கொள்ளலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாதுகாப்புப் பேழைகளை வேறு இடங்களுக்கும் எடுத்துச் செல்லலாம் என்றும் தெரிய வருகிறது.
ரஷ்யாவிடம் சுமார் 5,889 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றை ஏவுகணைகள் மூலமாகவும், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானங்களிலிருந்தும் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.