மேட்டூர் அருகே வடமாநில சுற்றுலா பயணிகள், காவலர்கள் மோதல் விவகாரம் - மதுவிலக்கு போலீசார் 3 பேர் பணியிடை நீக்கம்!
மேட்டூர் காரைக்காடு சோதனைச்சாவடியில் வடமாநில சுற்றுலா பயணிகளை தாக்கிய விவகாரத்தில் மதுவிலக்கு பிரிவு போலீசார் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
உத்தரப்பிரதேசத்தில் இருந்து 43 பேர் ஆன்மீக சுற்றுலாவாக தமிழகம் வந்தனர். காஞ்சி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட கோயில்களை தரிசனம் செய்து விட்டு கடந்த 27ஆம் தேதி தமிழக - கர்நாடக எல்லை பகுதியான காரைக்காடு சோதனைச்சாவடி வழியாக மைசூர் சென்றனர்.
அப்போது சோதனைச்சாவடியில் இருந்த 3 காவலர்கள் அவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது போதையில் இருந்த அஜய் என்பவர் 3 காவலர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு போலீசாரும் அவரை தாக்கியுள்ளனர். தகவலறிந்து சென்ற போலீசார் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வடமாநில இளைஞர் அளித்த புகாரின்பேரில் காவலர்கள் செந்தில்குமார், முத்தரசு, சுகவநேஸ்வரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், 3 காவலர்கள் அளித்த புகாரின் பேரில் சுற்றுலா பயணிகள் 22 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.