மேற்காசியாவில் ஆதிக்கம்! : கடல்சார் வல்லரசாக உருவெடுக்கும் இந்தியா!
ஆப்பிரிக்காவின் கடற்கரையிலிருந்து அமெரிக்கா வரை நீண்டிருக்கும் பெருங்கடல் பரப்பில், இந்தியா தனது ஆளுமையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலை நிறுத்தி வருகிறது. குறிப்பாக,மேற்கு ஆசியாவில் இந்தியா எப்படி தன் ஆதிக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
மேற்கு ஆசிய பகுதிகளில், இந்தியா தனது கடற்படை செல்வாக்கை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது. வளைகுடா நாடுகளுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உயர்மட்ட ராணுவப் பயிற்சிகளை அதிகரித்துள்ளது.
ஐஎன்எஸ் டிர், ஐஎன்எஸ் ஷர்துல் மற்றும் ஐசிஜிஎஸ் வீராவை உள்ளடக்கிய இந்திய கடற்படையின் முதல் பயிற்சிப் படை (1TS), வளைகுடா முழுவதும் தொடர்ச்சியான உயர்மட்ட கடற்படை இராணுவக் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது.
பஹ்ரைனை தலைமையகமாக கொண்டு செயல்படும் CMF ஒரு ஒருங்கிணைந்த கடல்சார் படையாகும் . இது 46 நாடுகளின் தன்னார்வ கடற்படை கூட்டாண்மை ஆகும்.
உலகில் மிக முக்கியமான கப்பல் பாதைகளை உள்ளடக்கிய சுமார் 3.2 மில்லியன் சதுர மைல் சர்வதேச கடல்பரப்பு உள்ளது.
இந்த கடல்பரப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் வளத்தைப் பாதுகாப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் CMF உருவானது.
தீவிரவாதத்தை அழிப்பது, கடற்கொள்ளையர்களைத் தடுப்பது, பிராந்திய ஒத்துழைப்பை வளர்த்தெடுப்பது மற்றும் பாதுகாப்பான கடல்சார் சூழலை மேம்படுத்துவது ஆகியவை CMF இன் முக்கிய குறிக்கோள்களாகும்.
2022 ஆம் ஆண்டு, ஒருங்கிணைந்த கடல்சார் படையில், ஒரு இணை அமைப்பாளராக இந்தியா சேர்ந்தது. இது மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியதில் இந்தியாவின் இருப்பை வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனை அடுத்து , இரு நாடுகளுக்கும் இடையே திட்டமிட்ட ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் துறைமுகத்தில் கூட்டு கடல்சார் பயிற்சிகள் நடந்தன. தொடர்ந்து, ஓமனில் நடந்த நசீம்-அல்-பஹ்ர் பயிற்சியில், விமான எதிர்ப்பு கூட்டுப் பயிற்சிகள் இயன் பெற்றன ஆகியவை இடம்பெற்றுள்ளன. பஹ்ரைனில் மனாமா கடற்படை பயிற்சிகளில், இரு நாடுகளுக்கும் இடையே தொழில்முறை பரிமாற்றங்கள் மற்றும் கலாச்சார மேம்பாட்டு திட்டங்கள் வலுப்படுத்தப் பட்டன.
மேலும், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் நடத்திய சமயத்தில், ஈரானின் பந்தர் அப்பாஸில் இந்திய மற்றும் ஈரான் கடற்படைகள் கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டன.
ஈரான் மற்றும் சவுதி அரேபியா, இஸ்ரேல். பாலஸ்தீனம் மற்றும் கத்தார் மற்றும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையே உள்நாட்டு மோதல்கள் முரண்பாடுகள் இருந்த போதிலும், இந்த நாடுகள் எல்லாம் ஒரே நேரத்தில் இந்தியாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்க விரும்புகிறது. மேலும் வளைகுடா நாடுகள் இந்தியாவுக்கு பல விஷயங்களில் உதவவும் முன் வந்துள்ளன.
இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியில் ஏறத்தாழ 60 சதவீதம் வளைகுடா நாடுகளில் இருந்து வருகிறது. அதில் 42 சதவீதம், ஆறு நாடுகள் கொண்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மூலம் பெறுகிறது. இந்தியாவுக்கான முதல் ஐந்து எண்ணெய் ஏற்றுமதியாளர்களில், மூன்று வளைகுடா நாடுகள் ஆகும். குறிப்பாக , சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 20 சதவீதமாகும்.
கத்தார் திரவ இயற்கை எரிவாயுவை (LNG) இந்தியாவுக்கு அனுப்புகிறது. இப்பகுதி உலகின் எரிசக்தி ஆற்றல் பாதுகாப்புக்கு இன்றியமையாததாகும்.
34 ஆண்டுகளுக்கு பின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு முதல் முறையாக 2015ம் ஆண்டு சென்ற பிரதமர் மோடி, இருதரப்பு வர்த்தகத்தை சுமார் 60 சதவிகிதம் அதிகரிக்க நடவடிக்கைள் எடுத்தார்.
குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் சமீபத்தில் தங்கள் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான பாதையில் இறங்கியுள்ளன.
வளைகுடாவில் இருந்து எரிசக்தி இறக்குமதியில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கடுமையான பாதிப்புக்கள் ஏற்படும்.
இந்தியாவின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பது, குறிப்பாக பாரசீக வளைகுடாவில் உள்ள முக்கியமான கப்பல் பாதைகள், இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்துக்கு அவசியமாகும்.
இந்த பிராந்தியத்தில் வலுவான கடற்படை இருப்பை பராமரிப்பதன் மூலம், இந்தியா தன் எரிசக்தி இறக்குமதியின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. கடற்படை பயிற்சிகள் மட்டுமின்றி கலாச்சார மற்றும் மனிதாபிமானஅடிப்படையிலும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா செயலாற்றி வருகிறது.
வெவ்வேறு செயல் திட்டங்கள் அடிப்படையிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளை இந்திய கடற்படை மேற்கு ஆசிய பகுதிகளில் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் இந்த பிராந்தியம் முழுவதும் தனது கடற்படை இருப்பை இந்தியா மேம்படுத்தியுள்ளது.
சொந்த தேவைகளுக்காகவும், பிற நாடுகளின் பாதுகாப்புக்காகவும், பொறுப்புள்ள ஒரு கடல்சார் வல்லரசாக இந்தியா மாறியுள்ளது.