For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பிரதமர் மோடியை நேசிக்கும் ட்ரம்ப் : இந்தியாவிற்கு கிடைக்கும் பலன்கள் என்ன? - சிறப்பு கட்டுரை!

09:10 AM Nov 13, 2024 IST | Murugesan M
பிரதமர் மோடியை நேசிக்கும் ட்ரம்ப்   இந்தியாவிற்கு கிடைக்கும் பலன்கள் என்ன    சிறப்பு கட்டுரை

இந்தியா ஒரு அற்புதமான நாடு என்றும், பிரதமர் மோடி ஒரு அற்புதமான மனிதர் என்றும் கூறியுள்ள அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை உலகம் முழுவதும் நேசிக்கிறது என்று பாராட்டியுள்ளார். மேலும், இந்தியா அமெரிக்காவின் மதிப்புமிக்க நட்பு நாடாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்துள்ளார். குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement

அதிகார பூர்வமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி, 47வது அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், கமலா ஹாரிஸை விட ட்ரம்ப் முன்னிலையில் இருக்கும் போதே, பிரதமர் மோடி, தொலைபேசியில்தொடர்பு கொண்டு, ட்ரம்பின் சரித்திர வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Advertisement

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ள தனது நண்பர் டொனால்ட் டிரம்புக்கு மனமார்ந்த வாழ்த்துகளைச் சொன்னதாகவும், தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த ஆவலாக இருப்பதாகவும் தனது எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மேலும், முதல் முறை அதிபராக இருந்த டிரம்ப்புடனான தனது சந்திப்புகளின் புகைப்படங்களையும் எக்ஸ் பதிவில் இணைத்திருந்தார்.

2019ம் ஆண்டு ஹூஸ்டனில் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சிக்காக, 80,000 மக்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி அதிபர் டிரம்புடன் கலந்து கொண்டார். 'ஹவுடி மோடி' யைத் தொடர்ந்து 2020ல் குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் மோடி ஏற்பாடு செய்த 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சுமார் 1,00,000 பேர் பங்கேற்றது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், உலகமே விரும்பும் நபராக உள்ள பிரதமர் மோடியுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ள ட்ரம்ப், மோடியையும் இந்தியாவையும் உண்மையான நண்பராகக் கருதுவதாகவும்,வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும்,தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படும் என்று உறுதியெடுத்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைத்ததாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது.

உலகத் தலைவர்களில், வெற்றிக்குப் பிறகு ட்ரம்ப் பேசிய முதல் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் ட்ரம்பின் இந்த செய்தி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவின் பிம்பத்தை அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

கடந்த ஆண்டு முதல், இந்தியாவுக்கு எதிராக அபாண்டமாக குற்றம் சாட்டுக்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறி வருகிறார். இது தொடர்பான வழக்கு அமெரிக்காவிலும், கனடாவிலும் நடைபெற்று வரும் நிலையில், அதிபர் ட்ரம்ப் அரசு, இந்திய தரப்பின் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அடுத்து, சீனாவை மிகப்பெரிய புவிசார் அரசியல் சவாலாக பார்க்கும் ட்ரம்ப் , இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பார் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க நிறுவனங்களான Apple Inc போன்ற பெரிய புதிய முதலீடுகளைக் கவர்ந்துள்ள இந்தியாவுடன், அமெரிக்காவின் வர்த்தக உறவுகளை அதிபர் ட்ரம்ப் வளர்த்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

குறிப்பாக, கடந்த நிதியாண்டில் 119.7 பில்லியன் டாலர் இருவழி வர்த்தகத்துடன், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக தோழனாக அமெரிக்கா உள்ளது. அனைத்து நாடுகளுக்கும் 20 சதவீத இறக்குமதி வரியும், சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 60 சதவீத வரியும் ட்ரம்ப் நடைமுறைபடுத்தும் பட்சத்தில், அது இந்தியாவின் வர்த்தகத்தை மேம்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. அதிபர் ட்ரம்ப் ஆட்சியிலும் இருநாட்டு இராணுவ உறவுகளும் சிறப்பாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

H-1B விசாக்களில் அதிக அளவில் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவுக்கு சேரும் நிலையில், அமெரிக்க குடியேற்ற விதிகளை அதிபர் ட்ரம்ப் மேலும் கடுமையாக்குவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரதமர் மோடி மீதான மதிப்பால், அமெரிக்கவுக்கு வேலைக்கு போகும் இந்தியர்களுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது என்று கூறப்படுகிறது.

(America First) 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்தித்த ட்ரம்பின் வெற்றி இந்தியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்பது தான் உண்மை.

Advertisement
Advertisement