மோடி 3.O பட்ஜெட் : வேலையில்லா திண்டாட்ட பிரச்னைக்கு முன்னுரிமை!
மோடி 3.0 அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்படும் நிலையில், வருமான வரியில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும் ? என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். மேலும், வேலையில்லா திண்டாட்டத்துக்குத் தீர்வு காண்பதே பட்ஜெட்டில் முக்கியமானதாக இருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 8-வது முறையாக வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி இந்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நிதிநிலை அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான இந்தியாவின் பொருளாதாரப் பாதையையும் இந்த பட்ஜெட் தான் நிர்ணயிக்கப் போகிறது.
ஏற்கெனவே, பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் நடுத்தர மக்கள், விலைவாசி உயர்வால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கூடவே, அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கே தடையாக உள்ளது.
2017-18 ஆம் ஆண்டில் 23.3 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர் சதவீதம் இப்போது 41.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நாட்டின் வளர்ச்சிவேகம் குறைய கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்திய இளைஞர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே வேலை வாய்ப்புக்குத் தேவையான திறன்களைக் கொண்டுள்ளனர் என்று கடந்த ஆண்டுக்கான இந்திய திறன்கள் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில்,அடுத்த 5 ஆண்டுகளில், ஆண்டுக்கு 6.5 சதவீத மொத்த மதிப்பு கூட்டப்பட்ட வளர்ச்சியை இந்தியா அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கு, ஆண்டுதோறும் 10 மில்லியன் வேலை வாய்ப்புக்களை இந்தியா உருவாக்க வேண்டும் என்று ( Goldman Sachs.)கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு மட்டும் 1.48 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி கற்க 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவியை, இ-வவுச்சர்கள் மூலம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இது ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என்றும், கடன் தொகையில் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வரும் 5 ஆண்டுகளில் ஆயிரம் ITI -க்கள் உருவாக்கப்படும். இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும். பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூலம் 12 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இத்திட்டத்தின் போது ஊக்கத்தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும்.
முதல் முறையாக வேலைக்கு செல்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக ஊக்கத்தொகை செலுத்தப்படும். வேலை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். 4 கோடி இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலை வழங்கும் வகையில், புதிய கொள்கை வகுக்கப்படும்.
வேலைவாய்ப்பை அதிகளவு உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, திறன் மேம்பாட்டுத் துறைக்கான பல திட்டங்களை மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்த ஆண்டு, நாட்டின் வேலை சந்தை 9 சதவீத வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், தகவல் தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு மற்றும் வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு போன்ற துறைகளில் அதிக வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்று கூறப்படுகிறது.
கடந்தாண்டு, இந்தியாவின் சிறு உற்பத்தித் தொழில்கள் 20.15 மில்லியனாக வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவின் சிறு மற்றும் குறுந்தொழில் வணிகங்கள் மட்டும் 11 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளன.
நாட்டில் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க, முன்னணி பொருளாதார நிபுணர்கள் கடந்த மாதம் பிரதமர் மோடியை சந்தித்து, தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.
இந்த சூழலில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் பட்ஜெட்டாக இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.