யுஜிசி தொடர்பான தீர்மானம் தேவையற்றது - முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து!
யுஜிசி விதிமுறைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் தேவையற்றது என அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழு அண்மையில் பிறப்பித்துள்ள புதிய விதிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் அவசர தீர்மானம் நிறைவேற்றியுள்ளது விந்தையாக இருக்கிறது எனவும்,
யுஜிசி விதிமுறைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் திமுக கூட்டணிக் கட்சிகள் இந்த தீர்மானத்தை ஆதரித்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யுஜிசி பிறப்பித்துள்ள விதிமுறைகள் தற்போது வரைவு நிலையில்தான் உள்ளன எனவும், மக்கள் தங்களது யோசனைகளை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, யுஜிசி விதிகள் குறித்து தமிழக சட்டப் பேரவையின் தீர்மானம் தேவையற்றது என பாலகுருசாமி கூறியுள்ளார். மேலும், துணைவேந்தர்களை மாநில அரசே நியமித்தால் ஊழல் மற்றும் பாரபட்சம் மீண்டும் வந்து, உயர்கல்வியின் தரம் சிதைந்துவிடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில், துணைவேந்தர் பதவி, தரகர்கள் உதவியோடு 5 முதல் 10 கோடி ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது என்று முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுபோலவே, அரசு நிதியுதவி பெறும் பல்கலைக் கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் பியூன் முதல் பேராசிரியர் வரையிலான பதவிகளை நிரப்ப தொகை நிர்ணயிக்கப்பட்டது என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
எனவே, நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் யுஜிசி விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மத்திய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் மோதும் போக்கை தமிழக அரசு கைவிட்டு, உயர்கல்வியின் நலனுக்காக யுஜிசியுடன் இணங்கிச் செயல்பட வேண்டிய தருணம் இது என பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.