ரயில்வே திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு விரைந்து முடிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,ரயில்வே திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவதாக கூறிய ரயில்வே அமைச்சரின் குற்றச்சாட்டை மேற்கோள்காட்டி உள்ளார்.
மேலும், விளம்பரத்துக்காக வீண் நாடகமாடி வருவதை திமுக அரசு வழக்கமாக வைத்துள்ளது என குற்றம்சாட்டியுள்ள அண்ணாமலை, தமிழகத்துக்கான மத்திய அரசின் ரயில்வே திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டேவுக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவரும், தமிழக மூத்த தலைவர்களில் ஒருவரும், அமரர் எம்ஜிஆர் அவர்களது அமைச்சரவையில் இரண்டு முறை தமிழக சுகாதாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றி, மருத்துவக் கட்டமைப்பில் தமிழகத்தை நாட்டின் முன்னணி இடத்துக்குக் கொண்டு சென்றவர்களில் முக்கியமானவருமான, டாக்டர் ஹண்டே
அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சிறந்த எழுத்தாளரும், தேசியவாதியுமான அவர், , நல்ல உடல் நலத்துடன், மேலும் பலபல ஆண்டுகள் தங்கள் மேலான கருத்துக்களால் எங்களை வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.