ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு - ஜனவரி 10-இல் ஆஜராக புனே நீதிமன்றம் உத்தரவு!
சாவர்க்கர் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஜனவரி 10-ம் தேதி ஆஜராக வேண்டும் என புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாவர்க்கர் குறித்தும் இந்துத்துவா கொள்கைகள் குறித்தும் அவதூறாக பேசியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் புனே நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேற்று நேரில் ஆஜராக ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என சத்யாகி சாவர்க்கர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
அப்போது ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருவதால், ராகுல் காந்தியால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என விளக்கம் அளித்தார். அதனடிப்படையில், ராகுல் காந்தியை வரும் ஜனவரி 10-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு புனே நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.