ராஜபாளையம் காவலர்கள் மீதான தாக்குதல் தமிழகம் வன்முறை காடாக மாறிக்கொண்டிருப்பதன் அடையாளம் - நாராயணன் திருப்பதி
தமிழகம் வன்முறைக் காடாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், திராவிட மாடல் அரசு தற்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு உருப்படியான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமது எக்ஸ் தளப்பதிவில், சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டது, திருச்சியில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட செய்திகள் இன்னும் அகலவில்லை என கூறியுள்ளார்.
தற்போது திருநெல்வேலியில் திரையரங்கின் மீது பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டை வீசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நாராயணன் திருப்பதி
குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராஜபாளையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு காவலர்களை மதுபோதை கும்பல் கடுமையாக தாக்கியது வெட்கக்கேடு மட்டுமல்ல, அவமானத்தின் உச்சக்கட்டம் என விமர்சித்துள்ளார்.
இந்த சம்பவங்கள், 'திராவிட மாடல்' ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அறவே அழிந்து போய் விட்டதை உறுதிப்படுத்துகிறது என்றும், அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறைக் காடாக மாறிக்கொண்டிருப்பதின் அடையாளமே ராஜபாளையம் காவலர்கள் தாக்கப்பட்ட கொடூரம் எனவும் அவர் கூறியுள்ளார்.