ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 2, 800 கோடி செலவில் குடிநீர் திட்டம் - மத்திய அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா தகவல்!
ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து மத்திய இரும்பு மற்றும் கனரக தொழில்துறை இணையமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எம்.பி. தர்மர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா, நாட்டில் 112 மாவட்டங்களை முன்னேற்றமடையச் செய்ய வேண்டிய மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு செய்ததாகவும் கூறினார்.