ரூ.34 லட்சம் கோடி சந்தை மதிப்பை நெருங்கும் ஆப்பிள் நிறுவன பங்குகள்!
அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் 34 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை வேகமாக நெருங்கி வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் ஏஐ என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறது. இதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதால், நவம்பர் தொடக்கத்தில் இருந்து ஆப்பிள் நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட 16 சதவீதம் உயர்ந்துள்ளன. அதன்படி நவம்பர் முதல் தற்போது வரை ஆப்பிள் பங்குகள் மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
இதற்கு செயற்கை நுண்ணறிவு மீதான முதலீட்டாளர்களின் ஆர்வமும், ஐபோன் மேம்படுத்தல்களுமே காரணம் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது சக போட்டியாளர்களான என்விடியா, மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்புகளை விட முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இதனால் விரைவில் அந்நிறுவனம் 34 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிப்பிடிக்கவுள்ளது. இந்த தொகையை மொத்த இந்திய பொருளாதார மதிப்புடன் ஒப்பிடப்பட்டு நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.