ரூ.400 கோடி வர்த்தகம் உச்சம் தொட்ட காலண்டர் உற்பத்தி!
சிவகாசியில் 2025-ம் ஆண்டுக்கான காலண்டர் வர்த்தகம் 400 கோடியை கடந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்..!
புது வருடம் பிறந்ததும் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு தேவை என்று முதலில் வாங்குவது நாள் காட்டியான காலண்டர்களைத்தான்.
தமிழக அளவில் கேலண்டர் உற்பத்தியில் சிவகாசி முன்னணி இடம் வகித்து வருகிறது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழில்களுக்கு அடுத்தபடியாக, சிவகாசியில் அச்சகத் தொழிலே பிரதானமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த காலண்டர்களில் 90 சதவீத கேலண்டர்கள் சிவகாசியில் உள்ள அச்சகங்களில்தான் உற்பத்தியாகின்றன.
சுமார் 800-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் இங்கு சீசன் அடிப்படையில், காலண்டர்கள், நோட்டு புத்தகங்கள், டைரிகள், வணிக நிறுவனங்களுக்கு தேவையான பில் புக், பேக்கிங் அட்டைகள், அழைப்பிதழ்கள், துண்டு பிரசுரங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகின்றன. தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் கேலண்டர்களை மட்டும் பிரத்தியேகமாக தயாரிக்க 50-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் அங்கு உள்ளன.
அந்த வகையில் கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு அன்று தொடங்கிய 2025-ம் ஆண்டுக்கான காலண்டர் உற்பத்தி, ஆர்டர்கள் அதிகரிப்பால் தீபாவளிக்குப் பின் மும்மடங்கானது. இதனால் தற்போது வரை காலண்டர் வர்த்தகம் 400 கோடி ரூபாயை கடந்துள்ளதால், அதன் உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு தேர்தல் ஏதும் இல்லாததால் அரசியல் கட்சியினரின் ஆடர்கள் 10 சதவீதம் குறைந்தபோதிலும், உற்பத்தி செய்யப்பட்ட கேலண்டர்களில் 90 சதவீதம் விற்பனைக்கு சென்றுவிட்டதால் நல்ல லாபம் அடைந்துள்ளதாக காலண்டர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.