வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு - கோவையில் இந்து உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்!
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்கக்கோரி தமிழகம் முழுவதும் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, கோவை சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பேட்டியளித்த ஹெச்.ராஜா, வங்கதேசத்தில் நூற்றுக்கணக்கில் இந்துக்கள் கொல்லப்படுவதாக குற்றம்சாட்டினார். இந்து கோயில்கள் தாக்கப்படுவதாகவும், இந்தியர்களின் வர்த்தக நிறுவனங்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ஹெச்.ராஜா உள்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 156 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மறவனேரியில் ஆர்.எஸ்.எஸ் மாநில பொருளாளர் மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 170 பேரை போலீசார் கைது செய்து பின்பு விடுவித்தனர். இ
இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பெரிய ஏரி பகுதி விஏஓ, காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.