வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு - சென்னையில் ஆர்எஸ்எஸ் சார்பில் கருத்தரங்கம்!
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
கோடம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில், சின்மயா மிஷன் சார்பில் சுவாமி மித்ரானந்தா, ஓய்வுப்பெற்ற ராணுவ மேஜர் மதன் குமார், அரசியல் திறனாய்வாளர் பானுகோம்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஆர்எஸ்எஸ் மாநில இணைச்செயலாளர் ராமகிருஷ்ண பிரசாத்,
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.
அந்நாட்டு சிறைகளில் உள்ள தீவிரவாதிகள் வெளியே விடப்பட்டுவிட்டதாக கூறிய அவர், இதன் காரணமாக இந்து மக்கள் மீது பெரியளவில் தாக்குதல் நடைபெறுவதாக தெரிவித்தார்.
பின்னர் பேசிய அரசியல் திறனாய்வாளர் பானு கோம்ஸ், எந்த பகுதியில் இந்துக்கள் பாதிக்கப்பட்டாலும் அதனை தட்டிக்கேட்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளதாக கூறினார். இந்தியாவில் எந்த பிரச்சினை வந்தாலும் மத்திய அரசு அதனை கூர்ந்து கவனித்து தக்க நேரத்தில் பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.
கருத்தரங்கில் பேசிய ஓய்வுப்பெற்ற ராணுவ மேஜர் மதன் குமார், இந்திய எல்லையில் இருந்து நமது ராணுவ வீரர்கள் ஒரு துப்பாக்கிச்சூடு நடத்தினால் போதும், வங்கதேசத்தில் போர் நின்றுவிடும் என கூறினார்.