வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் - ஐ.நா. தலையிட சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா வலியுறுத்தல்!
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறைக்கு முடிவு கட்ட ஐ.நா. தலையிட வேண்டுமென சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்தா வலியுறுத்தினார்.
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள இஸ்கான் கோவிலுடன் தொடர்புடைய சின்மோய் கிருஷ்ண தாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இது தொடர்பாக சென்னையில் உள்ள சின்மயா மிஷன் சுவாமி மித்ரானந்த செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்துக்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்றும், அமெரிக்காவில் இந்திய இந்துக்களே அதிக பட்டதாரிகளாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் முதுகலை, பிஎச்டி படித்தவர்களில் இந்தியர்களே அதிகம் என்றும், இந்துக்கள் யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வங்கதேச இந்துக்கள் அங்கேயே இருக்க வேண்டும் என்றும், வங்கதேச இந்துக்களுக்காக தனி பிராந்தியம் அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனை ஐ.நா. பரிசீலிக்க வேண்டும் என்றும் சுவாமி மித்ரானந்தா கூறினார்.