வடமாநில இளைஞர் கைது!
ஆன்லைன் கேம் மூலம் அறிமுகமாகி கொடைக்கானலைச் சேர்ந்த சிறுமி பேசிய வீடியோவை தவறாக எடிட் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது ஐ-பேடில் ஒமேகா ஒன் டிவி என்ற விளையாட்டு செயலியை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளார்.
இதில் முன் பின் தெரியாதவர்கள் கூட முகம் பார்த்து வீடியோ சாட் செய்தபடி விளையாட முடியும் என்ற நிலையில், சிறுமி தனது நண்பர்களுடன் இதை விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் சிறுமி இந்த ஆன்லைன் கேமை விளையாடிக்கொண்டிருந்தபோது, அவருக்கு அறிமுகமான அடையாளம் தெரியாத நபர் சிறுமியிடம் 'ஐ லவ் யூ' என கூற முடியுமா என்று சவால் விட்டுள்ளார்.
அதையேற்று சிறுமியும் விளையாட்டாக அவ்வாறு கூற, அந்த நபர் அதனை திரித்து எடிட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக தெரிகிறது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் கொடைக்கானல் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வீடியோவை பதிவேற்றம் செய்த நபர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் வடமாநில இளைஞரை கைது செய்தனர். விசாரணையில் அந்த இணைய செயலியை அந்த வடமாநில இளைஞரே உருவாக்கி பலருடன் பேசி வந்தது தெரியவந்தது.