வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை - போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு!
வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், மோட்டார் வாகன விதிகளை மீறி இருசக்கர வாகனங்கள் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது எனவும், வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை கண்டறிந்து அதன் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், இது தொடர்பான அறிக்கையை மண்டலம் வாரியாக தினமும் மாலை 7 மணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.