வரதட்சணை தடுப்பு சட்டம் : பெண்களுக்கு ஆயுதமா? கேடயமா? - சிறப்பு கட்டுரை!
வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டங்களைப் பல பெண்கள் தவறாக துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க பொய் புகார்களை தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கணவரையும், மாமியார், மாமனார் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பழிவாங்க பெண்கள் பயன்படுத்தும் ஆயுதமாகிறதா வரதட்சணை புகார் ? என்பது விவாதக்களமாகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் பெங்களுருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த திங்கட்கிழமை, அதுல் சுபாஷ், தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தற்கொலைக்கான காரணம் குறித்து, 90 நிமிட வீடியோவும், 24 பக்க கடிதமும் எழுதியுள்ளார்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, குடும்ப வன்முறை சட்டத்தால், பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக வாதாட வேண்டும் என்று, தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.
அதுல் சுபாஷின் தற்கொலை, இந்தியாவில் நடக்கும் ஆண்களின் சட்டப்பூர்வ இனப்படுகொலை என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.அதுல் சுபாஷின் தற்கொலைக்கு நீதி கேட்டு #JusticeForAtulSubhash மற்றும் #MenToo என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி உள்ளன. மேலும், பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் ஆபத்தான முறையில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற விவாதத்தையும் மீண்டும் எழுப்பியுள்ளது.
இதற்கிடையே, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணா என்பவர், மனைவியின் பொய் புகார்களை ரத்து செய்ய ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆன நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகரத்தினா, கோட்டீஸ்வரர் சிங், மனைவியின் புகார்களை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், குடும்ப வன்முறை சட்டம் என்பது பெண்களின் பாதுகாப்புக்கான ஒரு கேடயம் . அதை,பெண்கள் ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்றும், நாடு முழுவதும் இந்த போக்கு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். இத்தகைய பொய் புகார்களை முளையிலேயே கிள்ளி எறிவது விரைவான நீதிக்கு உதவும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும், பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து பாதுகாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A பிரிவு, தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக ஏழு வழக்குகளில் பல்வேறு உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.
498A பிரிவை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் பெண்கள் ஒரு ‘சட்டப் பயங்கரவாதத்தை’ உருவாக்கியுள்ளனர் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியதை, அப்படியே உச்ச நீதிமன்றமும் பயன்படுத்தியிருந்தது.
இதுபோன்ற பல வழக்குகளில், பெண்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொதுவாக மற்றும் தெளிவற்றதாக உள்ளன என்றும் பல நீதிமன்றங்கள் கூறியுள்ளன.
திருமணம் தொடர்பான அனைத்து வழக்குகளும், வரதட்சணை துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளும், ‘ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன’ என்றும், வரதட்சணை கொடுமை தொடர்பான சட்டத்தின் தவறான பயன்பாடு இப்படியே தொடர்ந்தால், அது திருமண அமைப்பையே முற்றிலும் அழித்துவிடும் என்றும் அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
குடும்ப வன்முறை சட்டத்தைத் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க கடந்த பல ஆண்டுகளாகவே நீதிமன்றங்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளன.
2008-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றம், திருமணம் அல்லது குடும்பத் தகராறில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன், காவல்துறை கட்டாயம் முதற்கட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
2014ம் ஆண்டில் வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க, போதிய ஆதாரமின்றி இந்தச் சட்டத்தின் கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்தச் சட்டம் பழிவாங்கும் நோக்கில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்தது.
2017-ஆம் ஆண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் குடும்ப நலக் குழுவை அமைத்து இதுபோன்ற விஷயங்களைக் கண்டறிந்து தீர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்’ல் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்த பல்வந்த் சிங், ராஜஸ்தானில் நான்கு காவல் நிலையங்களில் மட்டும் 498A பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 300 வழக்குகளில் 90 சதவீத வழக்குகள் பொய் புகார்கள் என்றும் அவை, நீதிமன்றத்துக்கு வருவதற்கு முன்பே முடிக்கப்பட்டன என்று தெரிவித்திருக்கிறார்.
குடும்ப வன்முறை புகார் கொடுக்க, வரதட்சணைக் குற்றச்சாட்டையும் சேர்க்க வேண்டும் என்பதால், வரதட்சணைக் கொடுமைகள் நடக்காத வழக்குகளிலும், அவை சேர்க்கப் படுகின்றன. எனவே ஆதாரம் இல்லை என்று வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வரதட்சணை இல்லை என்பதாலேயே வன்முறை எதுவுமே நடைபெறவில்லை என்றும் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் சில வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
இப்படி, குடும்ப வன்முறை சட்டம் தவறாகப் பயன்படுத்துவதற்கான அடிப்படை உள்ளது என்பதை நீதிமன்றமே ஏற்றுக்கொண்டுள்ளது என்று ஆண்கள் உரிமைகளுக்காக போராடும் அமைப்புக்கள் தெரிவித்தன.
சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது எந்தவொரு சட்டத்திலும் சாத்தியம் என்றாலும், குடும்ப வன்முறை சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட வழக்குகள் அதிகம் பேசு பொருளாவது, இந்த சட்டம் பெண்களுக்கு சிறப்புப் பாதுகாப்பை வழங்கும் சட்டம் என்பதால் தான்.
குடும்ப வன்முறை சட்டம் , பெண்களுக்கு மிகவும் புரட்சிகரமான சட்டமாகும். பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைத் தடுத்து நிறுத்துவதில் இந்த சட்டம் மிக முக்கியப் பங்காற்றுகிறது என்று குஜராத்தின் முன்னாள் ஏடிஜிபி ரஞ்சன் பிரியதர்ஷி தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கூட, தேவைப்பட்டால், இந்த சட்டத்தின் பிரிவுகளை மறு ஆய்வு செய்யலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.