வரும் 15ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
வரும் 15ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல், வட கடலோர, தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்த பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாகவும் கூறினார்.
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் வலுகுறையும் என தெரிவித்த அவர், வரும் 15ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறினார்
மேலும் வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், மழை, புயல் காலங்களில் வானிலையை 100 சதவீதம் துல்லியமாக கணிக்கும் தொழில்நுட்பம் இதுவரை தயாராகவில்லை என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.