வறண்ட வேடந்தாங்கல் ஏரி : கால்வாய் துார் வாராததால் குறைந்த பறவைகள் வருகை - சிறப்பு தொகுப்பு!
புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால் நீர்வரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதர்கள் மண்டியும், கழிவுகள் நிரம்பியும் காணப்படும் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், பல்வேறு விதமான பறவைகளை கண்டு களிப்பதற்கும், நேரத்தை செலவிடுவதற்கும் சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமைந்துள்ளது.
மியான்மர், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வேடந்தாங்கலுக்கு வருகை தந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு தேசிய அளவில் புகழ்பெற்றதாக திகழும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால் புதர்கள் மண்டி காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது
நத்தை, கொத்தி நாரை, பாம்பு, சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, வெள்ளை அரிவாள் மூக்கன் என ஆயிரக்கணக்கான பறவைகள் வேடந்தாங்கலை நோக்கி வருகின்றன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேடந்தாங்கள் ஏரி நிரம்பி கடந்த ஆண்டு முழுமையாக காணப்பட்ட நிலையில், நடப்பாண்டு வளையபுத்தூர் ஏரியிலிருந்து வரும் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால் புதர்கள் மண்டியும் குப்பைக் கழிவுகள் நிரம்பியும் காணப்படுகிறது
ஆண்டுதோறும் பருவமழைக்கு முன்பாக தூர்வாரப்படும் கால்வாய்களை, நடப்பாண்டில் தூர்வாராமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருவதாக வனத்துறையினர் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
உத்திரமேரூர் ஏரியில் இருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் வரத்து தொடங்கியிருக்கும் நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களை முழுமையாக தூர்வாரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.