வலுவடைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - சென்னையில் பரவலாக மழை!
தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நாளை முதல் 24-ம் தேதி வரை வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழையால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைதொடர்ந்து நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாசாலை, அமைந்தகரை, கோயம்பேடு மற்றும் கிண்டி என நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர். மேலும், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.