வளரும் நாடுகள் வஞ்சிப்பு! : காலநிலை ஒப்பந்தம் இந்தியா நிராகரிப்பு!
சமீபத்தில் நடந்து முடிந்த COP29 என்ற ஐநா காலநிலை உச்சி மாநாட்டில், 2035ம் ஆண்டு முதல், வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை காலநிலை நிதிக்காக வளர்ந்த நாடுகள் வழங்க வேண்டும் ஒப்பந்தத்தை இந்தியா நிராகரித்து உள்ளது. ஐநா நாடுகளின் காலநிலை சீரமைப்பு ஒப்பந்தத்தை இந்தியா நிராகரிக்க என்ன காரணம் ? என்பதை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தொடர்ந்து அதிகரித்து வரும் கார்பன் வெளியேற்றத்தால் உலகத்தின் வெப்பம் நாளுக்கு நாள் கூடுகிறது. உலகம் வெப்பமயமாவதைக் குறைப்பதற்காக, ஐநா நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்தன.
அதற்காக தொடங்கப் பட்டது தான் The Conference of the Parties (COP) என்ற காலநிலை மாற்றத்திற்கான ஐநாவின் அமைப்பாகும். இந்த அமைப்பில், காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 198 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலகளாவிய காலநிலை சவால்களை எதிர்கொள்வது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும், தேசிய உமிழ்வுத் தரவை மதிப்பாய்வு செய்யவும், முன்னேற்றத்தை மதிப்பிடவும், உலகளாவிய காலநிலைக் கொள்கையை வடிவமைக்கவும் இந்த அமைப்பு கூடுகிறது.
2015ம் ஆண்டு பாரிஸில் நடந்த ஐநா பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் புதிய இலக்குகளுடன் மாசுபாட்டைக் குறைக்கும் ஒரு திட்டத்தை உலக நாடுகள் ஒப்புக்கொண்டன.
இந்த ஆண்டுக்கான 29வது உச்சி மாநாடு, கடந்த வாரம்,அஜர்பைஜானில் உள்ள பாகு ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அனைவருக்கும் வாழக்கூடிய இடமான பூமியை மாற்றும் முதலீடு என்ற தலைப்பில், கடந்த வெள்ளிக்கிழமை முடிய வேண்டிய மாநாடு , சர்ச்சைகள் காரணமான , ஞாயிற்றுக் கிழமை வரை நீடித்தது.
இந்த உச்சி மாநாட்டில், வளரும் நாடுகளுக்கு காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் மாற்றியமைப்பதற்கும் கூடுதல் நிதியுதவி வழங்க ஒப்புக் கொள்ளப் பட்டன.
அதன்படி, வளர்ந்த நாடுகள் 2035ம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை வளரும் நாடுகளுக்கு, காலநிலை நிதியாக அளிக்கும் ஒப்பந்தம் கொண்டு வரப் பட்டது. தற்போது 100 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு என்பதில் இருந்து இது அதிகமான தொகையாகும்.
வளரும் நாடுகள் வெப்பமடையாமல் இருக்க உதவுவதற்காகவும், தூய்மையான ஆற்றலுக்கு மாறுவதற்காகவும், புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்வதற்வதற்காகவும், இந்த தொகை பயன்படும்.
வளரும் நாடுகளில், காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற தொழில்நுட்பங்களை பெரிய அளவில் பயன்படுத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கவும் இந்த நிதி தேவைப்படுகிறது.
ஏற்கெனவே வளரும் நாடுகள் 1.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைக் கேட்டிருந்த நிலையில், 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒப்பந்தத்தை வளரும் நாடுகள் ஏற்கவில்லை. நைஜீரியா,பொலிவியா போன்ற பல சிறிய நாடுகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன. குறிப்பாக, அற்பமான ஒப்பந்தம் என்று சொல்லி, இந்தியா இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தது.
வழக்கத்திற்கு மாறாக கடுமையான வார்த்தைகளால் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்திருக்கும் இந்திய பிரதிநிதி சாந்தினி ரெய்னா, ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு இந்தியாவை பேச அனுமதிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய கார்பன் வெளியேற்ற நாடான சீனா, இந்த ஒப்பந்தத்துக்கு தனது ஒப்புதலை வழங்கும் வகையில் கூட்டத்தில் அமைதியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புவி வெப்பமடைதலுக்கு எதிரான காப்பீட்டுக் கொள்கையாக 300 பில்லியன் டாலர்கள் என்பது ஒரு தொடக்கப் புள்ளியாகும். என்றாலும், இந்தியா கூறியது போல வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் புவி வெப்ப சவால்களை எதிர்கொள்ள இந்த நிதி மிக சொற்பமானது என்பதே உண்மை.