வாக்கு அரசியலுக்காக திமுக நடத்தும் நாடகத்திற்கு தமிழக மக்கள் தக்க பதிலளிப்பார்கள் - அண்ணாமலை உறுதி!
வாக்கு அரசியலுக்காக திமுக நடத்தும் நாடகத்திற்கு, கூடிய விரைவில் தமிழக மக்கள் பதிலளிப்பார்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், "கோயம்புத்தூரில், கோவை குண்டு வெடிப்புத் தீவிரவாதிகளுக்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து, நடைபெற்ற கருப்பு தின பேரணியில் கலந்து கொண்டோம். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் . சிவலிங்கம். கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், , கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ரமேஷ் மற்றும் பெருவாரியான பொதுமக்களும், பாஜக சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டனர்.
தீவிரவாதச் செயல்களால், கோயம்புத்தூரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோயம்புத்தூரில் நடைபெறும் தீவிரவாதச் செயல்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறது திமுக அரசு.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவை மனித வெடிகுண்டு தாக்குதலை, சிலிண்டர் வெடிப்பு என்று பூசி மறைக்கப் பார்த்தது திமுக அரசு. அதற்குத் துணை நின்றது காவல்துறை. ஆனால், என்ஐஏ குற்றப்பத்திரிக்கையில், கோவை மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்காகத் திட்டமிடப்பட்ட இடங்கள், அதன் பின்னணியிலிருந்த தீவிரவாதிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், கோயம்புத்தூர் காவல் ஆணையர் அலுவலகமும் ஒன்று.
இனியாவது காவல்துறையினர் விழித்துக் கொள்ள வேண்டும். வாக்கு அரசியலுக்காக திமுக ஆடும் நாடகத்துக்கு, காவல்துறை துணைபோகக் கூடாது. கடந்த 1998 ஆம் ஆண்டு, 58 உயிர்கள் பலியான கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின்போதும், திமுக ஆட்சிதான். திமுக அரசு நினைத்திருந்தால், அந்த குண்டுவெடிப்பையும் தடுத்திருக்க முடியும்.
அத்தனை உயிர்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், திமுக, வாக்கு அரசியலுக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், தீவிரவாதச் செயல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால், 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அந்த குண்டுவெடிப்புக்குக் காரணமான தீவிரவாதியின் உடலை, ஊர்வலமாகக் கொண்டு செல்ல அனுமதித்திருக்கிறது அதே திமுக அரசு.
திமுக மட்டுமல்ல, சீமான், திருமாவளவன் ஆகியோரும், வாக்கு அரசியலுக்காக, தீவிரவாதிக்கு இரங்கல் கட்டுரை எழுதியிருக்கிறார்கள். கோயம்புத்தூர் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். கோயம்புத்தூரின் வளர்ச்சியும், முன்னேற்றமும் பாதிப்புக்குள்ளாவதே, இந்த வாக்கு அரசியல் செய்யும் கட்சிகளால்தான். கோயம்புத்தூர் மக்கள் இந்தக் கட்சிகளைப் புறக்கணிப்பதே, வளர்ச்சிக்கான தீர்வாக அமையும்.
மேலும் பேரணியில் பங்கேற்ற , இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சிவலிங்கம், பாஜக
சகோதர சகோதரிகள், பொதுமக்கள் உள்ளிட்டஅனைவரையும் கைது செய்திருக்கிறது கையாலாகாத திமுக அரசின் காவல்துறை.
கோயம்புத்தூரில் குண்டு வைத்து பொதுமக்களைக் கொன்ற தீவிரவாதியின் இறுதி ஊர்வலத்துக்குப் பாதுகாப்பும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரிய எங்களைக் கைதும் செய்து, வாக்கு அரசியலுக்காக திமுக நடத்தும் நாடகத்திற்கு, கூடிய விரைவில் தமிழக மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.