வாஜ்பாய் பிறந்த நாள் : நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் வருகை தந்தனர். பின்னர் வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வாஜ்பாயின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்ட பிரதமர் மோடி, வலிமையான, வளமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்க வாஜ்பாய் தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது தொலைநோக்கு பார்வையும், பணியும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான உறுதிப்பாட்டிற்கு தொடர்ந்து பலம் அளிக்கும் எனவும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதேபோல் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.