வாரி வழங்கும் கோடீஸ்வரர்கள் : நாள்தோறும் ரூ.6 கோடி நன்கொடை வழங்கும் ஷிவ் நாடார் - சிறப்பு கட்டுரை!
நாட்டிலேயே அதிக அளவில் நன்கொடை செய்யும் தொழிலதிபர் பட்டியலில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஹெச்சிஎல் (HCL) நிறுவனர் ஷிவ் நாடார் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி வருகிறார்.
மும்பையைச் சேர்ந்த Hurun India மற்றும் EdelGive ஆகியவை இணைந்து,ஆண்டுதோறும் அதிக நன்கொடைகள் வழங்கிய இந்திய நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல், இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை, நன்கொடையாளர்களின் மொத்த பணம் அல்லது பணத்துக்கு சமமான மதிப்பின் மூலம் அளவிடப்பட்டு இந்த பட்டியல் தயாரிக்கப் பட்டதாக 'Hurun India' கூறியுள்ளது.
இந்த ஆண்டு 203 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 96 பேர் புதிய நன்கொடையாளர்களாக இந்த பட்டியலில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில், HCL ஷிவ் நாடார், ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி, குமார் மங்கலம், கௌதம் அதானி, ரோகிணி நிலேகனி உள்ளிட்டோர் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளனர். பட்டியலில் இடம்பெற்ற இந்திய நன்கொடையாளர்கள் அனைவரும் சேர்ந்து மொத்தமாக, 8783 கோடி ரூபாய் நிதியை நன்கொடையாக வழங்கி யுள்ளனர்.
Zerodha நிறுவனத்தின் நிகில் காமத், மிக இளைய வயதில் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மேலும், அதிக நன்கொடை வழங்கிய பெண்மணி என்ற பெருமையை ரோகினி நிலேகனி பெற்றுள்ளார்.
இதில், கடந்த நிதியாண்டில் 2,153 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதன் மூலம், நாட்டின் மிகப்பெரிய கொடையாளராக 79 வயதான HCL நிறுவனர் ஷிவ் நாடார் முதலிடத்தை 5 ஆண்டுகளாக தொடர்ந்து இடத்தை தக்க வைத்திருக்கிறார்.
இந்தப் பட்டியலில் 407 கோடி ரூபாய் நிதியை நன்கொடை வழங்கிய 67 வயதாகும் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதனை தொடர்ந்து, 352 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி, மூன்றாவது இடத்தில் பஜாஜ் குழுமம் இடம்பெற்றுள்ளது.
57 வயதாகும் குமார் மங்கலம் பிர்லா 334 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி, நான்காவது இடத்திலும், 330 கோடி ரூபாய் நன்கொடையுடன் 62 வயதாகும் கெளதம் அதானி ஐந்தாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி 307 கோடி ரூபாயும், INDO MIM நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா சிவுகுலா 228 கோடி ரூபாயும், வேதாந்தா குழும அனில் அகர்வால் குடும்பம்181 கோடி ரூபாயும், சுஷ்மிதா மற்றும் சுப்ரடோ பக்ஷி 179 கோடி ரூபாயும், ரோகிணி நிலேகனி 154 கோடி ரூபாயும், இந்த ஆண்டு நன்கொடை வழங்கி உள்ளனர்.
1994 ஆம் ஆண்டு முதல், ஷிவ் நாடார் பவுண்டேசன் வாயிலாக, கல்வி, மருத்துவம், கலை மற்றும் கலாசாரம் ஆகியவற்றுக்கு அதிக அளவில்,ஷிவ் நாடார் நன்கொடை வழங்கி வருகிறார். அதன்படி, ஒரு நாளைக்கு, 6 கோடி ரூபாய் நிதியை வழங்கி வருகிறார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ஷிவ் நாடாரின் நன்கொடை மதிப்பு இந்த ஆண்டு, 5 சதவீதம் உயர்ந்துள்ளது.
தனிப்பட்ட நபர்களின் நன்கொடையை மட்டும் கணக்கில் கொண்டாலும், ஷிவ் நாடார் 1,992 கோடி ரூபாய் நன்கொடையுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த உயர்மட்ட நன்கொடையாளர்கள் முதன்மையாக கல்விக்காக நன்கொடை அளித்துள்ளனர் என்று சுட்டிக் காட்டியுள்ள Hurun India அறிக்கை கல்விக்கு மட்டும் சுமார் 3,680 கோடி ரூபாய் நன்கொடை செய்யப்பட்டதாகவும் , அதற்கு அடுத்தபடியாக சுகாதாரத்துக்காக 626 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப் பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில்,100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை செய்வோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என்றும், 61 பேர் 20 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை செய்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.