வால்பாறை மக்கள் பிரச்சினைக்கு திமுக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
வால்பாறை மக்கள் பிரச்சினைக்கு திமுக அரசு உடனடியாக தீர்வு காணவேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவத்துள்ளதாவது : "கடந்த 2004 -2014 வரை திமுக-காங்கிரஸ் மக்கள் விரோதக் கூட்டணி ஆட்சியின் மற்றுமொரு துரோகத்தால், வால்பாறை பகுதி பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பது தற்போது வரை தொடர்கிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அரசாணை எண் 145 ன் படி, ஆனைமலை புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு, 958.59 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு, புலிகள் காப்பகத்தின் உள்வட்டம் அறிவிக்கப்பட்டது.
பின்னர், கடந்த 13/8/2012 அன்று அரசாணை எண் 233 ல், புலிகள் காப்பகத்தின் வெளிவட்டமாக, 521.28 சதுர கிலோமீட்டர் பரப்பளவை அறிவித்தனர். வால்பாறை நகர்மன்றத் தீர்மானங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிந்துரைகளுக்கு முற்றிலும் எதிராக, வனப்பகுதியின் எல்லையோர கிராமங்களான அழியார்.
அங்கலக்குறிச்சி, சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர் முதல் பூண்டி வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைக் கிராம சபைகளின் ஒப்புதல் இன்றி. எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், திமுக காங்கிரஸ் ஆட்சி வெளியிட்ட இந்த அறிவிப்பினால், புலிகள் காப்பகத்தின் வெளிவட்டப் பரப்பு 521.28 சதுர கிலோமீட்டர், உள்வட்டப் பரப்பு 958.59 சதுர கிலோமீட்டர் என மொத்தம் 1479.87 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஆனைமலை புலிகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, வால்பாறை பகுதியில் சோதனைச் சாவடி அமைத்து, சுற்றுலா மூலம் வால்பாறை மக்களுக்குக் கிடைக்கும் வாழ்வாதாரத்தை முடக்கினர். சுற்றுலா மற்றும் தேயிலை தொழில் நிறுவனங்களை நம்பியிருக்கும் வால்பாறை இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. மேலும், பொள்ளாச்சி வால்பாறை பிரதான சாலையைப் பயன்படுத்த வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளும் விதித்ததால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்த நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில், மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளையும். பல தேயிலைத் தோட்டப் பகுதிகளையும் இணைத்து, திமுக அரசு, சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலம் (ESZ-Eco sensitive zone) எனத் தவறுதலாக வரைபடம் தயாரித்ததன் காரணமாக, தற்போது 2 லட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம் அமைக்கும்போதும், அதன் உள்வட்ட, வெளிவட்ட பரப்பளவை அறிவிக்கும்போதும், பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர், கிராம சபைகள் என யாருடைய கருத்தையும் கேட்காமல் தன்னிச்சையாக 1,479.87 ச.கி.மீ பரப்பளவை அறிவித்து, பொதுமக்களுக்குப் பல கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வழி செய்த திமுக, தற்போது, பொள்ளாச்சி செல்லும் பிரதான சாலையையும். பொதுமக்கள் வாழும் கிராமங்களையும்.
தேயிலைத் தோட்டங்களையும் சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டல வரைபடத்தில் இணைத்து, வால்பாறை பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையே முடக்கியிருக்கிறது. உடனடியாக, வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிராமப் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு, சுற்றுச்சூழல் நுண்ணுணர்வு மண்டலத்திற்காகத் தமிழக அரசு கொடுத்துள்ள வரைபடத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து, மத்திய அரசுக்கு எடுத்துச் சென்று, இந்தப் பகுதிகளை மறுவரையறை செய்யுமாறு, தமிழக வனத்துறையையும், திமுக அரசையும் வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.