விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் - அரிசியில் எழுதி கல்வியை தொடங்கிய மழலைகள்!
விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வி பயில தொடங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் விஜயதசமியை முன்னிட்டு சேலம் - பெங்களூரு சாலையில் உள்ள ஐயப்பா ஆசிரமத்தில் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்தும், நெல் மணிகளால் குழந்தைகளின் நாவில் எழுதினர். அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களிலும், பள்ளிகளிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீவனமாலிஸ்வரா சரஸ்வதி கோயிலில் விஜயதசமி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. அப்போது தங்கத்திலான ஆணியை கொண்டு குழந்தைகளின் நாவில் எழுதப்பட்டது.
இதையடுத்து அரிசியில் குழந்தைகளின் பெயர்களை எழுத வைத்து ஏடு தொடங்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் உள்ள கலைமகள் ஆலயத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.ஏ.வி. மேல்நிலை பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரிசியில் எழுத வைத்தனர்.
நவராத்திரி விழாவின் நிறைவு நாளான விஜயதசமியை ஒட்டி தஞ்சை மாவட்டம், கும்பகோணம் உள்ள மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. முன்னதாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நவதானியங்களில் தமிழ் எழுத்துக்களை எழுத வைத்தனர். இதில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று தங்கள் குழந்தைகளுடன் கல்வி தொடக்க நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான மழலையர் பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயதசமியை ஒட்டி தருமபுர ஆதின மழலையர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.மேளதாள இசையுடன் வந்த குழந்தைகளுக்கு ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நாக்கில் மயில் இறகு கொண்டு கல்வியை தொடங்கி வைத்தார். மேலும் நெல்மணிகளில் தமிழ் எழுத்துக்களை எழுத வைத்து குழந்தைகளுக்கு அவர் ஆசிகளை வழங்கினார்.