விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்து - உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக, ஆலையின் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர் அருகேயுள்ள பொம்மையாபுரம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 4 அறைகளும் தரைமட்டமான நிலையில், அங்கு பணிபுரிந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆலை உரிமையாளர் சசிபாலன், மேற்பார்வையாளர் சதீஷ்குமார் மற்றும் போர்மேன் கணேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, 3 பேர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண தொகை போதாது என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.