For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

விரைவில் குடியேறலாம் : செவ்வாயில் உயிரினங்கள் அடையாளம் கண்டுபிடிப்பு - சிறப்பு கட்டுரை!

08:00 AM Dec 06, 2024 IST | Murugesan M
விரைவில் குடியேறலாம்   செவ்வாயில் உயிரினங்கள் அடையாளம் கண்டுபிடிப்பு   சிறப்பு கட்டுரை

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருப்பதற்கான புதிய தடயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய ஆய்வு முடிவுகள், செவ்வாய் கிரகத்தைப் பற்றிய எதிர்கால ஆய்வுகளுக்கான அடித்தளத்தை அமைத்திருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நீண்ட காலமாகவே செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய் கிரகத்தில் பில்லியன்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement

2011ஆம் ஆண்டில், சகாரா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4.45 பில்லியன் ஆண்டுகள் பழமையான NWA7034 என்ற செவ்வாய் கிரக விண்கல், இந்த அதிர்ச்சியான தகவலுக்கு சான்றாக உள்ளது.

தனது பளபளப்பான கருப்பு நிறத்தால் “அழகு கருப்பு” என்று அழைக்கப்பட்ட இந்த விண்கல்லை எடுத்து ஆஸ்திரேலியாவின் கர்ட்டின் புவி மற்றும் கிரக அறிவியல் கல்வி நிறுவன விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

Advertisement

விண்கல்லிலிருந்து இரும்பு, அலுமினியம், சோடியம், ஜிர்கான் ஆகிய தாதுப் பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

ஜிர்கான் தாதுப்பொருளை ஆய்வுசெய்தபோது, இது 445 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று தெரியவந்தது. அதில் நீர் திரவங்களின் தடயங்கள் கண்டறியப் பட்டன. இது, செவ்வாய் கிரகத்தின் ஆரம்ப காலத்தில் நீர் இருந்ததற்கான தெளிவான ஆதாரம் என்று கூறப்பட்டது.

நாசாவின் இன்சைட் லேண்டர் தற்போது செயல்படவில்லை என்றாலும், செவ்வாய் கிரகத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆய்வு செய்தது. நில அதிர்வு தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 1,300க்கும் மேற்பட்ட marsquakes எனப்படும் செவ்வாய் நில நடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆய்வு முடிவுகள் அடிப்படையில், செவ்வாய் கிரகத்தில் அதிக அளவிலான நீர் இருந்திருக்கலாம் என்று சுட்டிக் காட்டின.

செவ்வாய் கிரகத்தில் வட துருவத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல் இருந்தது. அது ஆர்க்டிக் பெருங்கடலின் அளவுக்குப் பெரிய கடலாக இருந்துள்ளது என்றும் கண்டறியப்பட்டன. தற்போது, செவ்வாயின் வடக்கு அரைக்கோளத்தில் 1,800 மைல் அகலமுள்ள சமவெளியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, அசிடாலியா பிளானிஷியா என்று அழைக்கப்படும் பகுதியில் நுண்ணுயிரிகள் இருப்பதற்கான நீரும், வெப்பமும் இருந்த அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில், கதிரியக்க வெப்பத்தை உருவாக்கும் தனிமங்கள் அதிக அளவில் உள்ளன. நிலத்தடி நீர் இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இனி அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உருவாகுமா என்பதைச் செவ்வாயின் மேற்பரப்பில் துளையிட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2028ம் ஆண்டில், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் எக்ஸோமார்ஸ் ரோவர் என அழைக்கப்படும் ரோசாலிண்ட் பிராங்க்ளின் ரோவரை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

2013-ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய மங்கள்யான்-1, 298 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, செவ்வாய் கிரகத்தை அடைந்தது. , செவ்வாய் கிரகத்தின் பல்வேறு புகைப்படங்களைப் பூமிக்கு அனுப்பியது.

இதன் தொடர்ச்சியாக மங்கள்யான்-2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஏர்பேக்குகள் மற்றும் சரிவுகள் போன்ற பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மங்கள்யான்-2 ரோவர் ஒரு மேம்பட்ட ஸ்கை கிரேன் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறக்கப்படுகிறது.

இந்த தரை இறங்குதலை நிர்வகிக்க சூப்பர்சோனிக் பாராசூட் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய் கிரகத்தின் மெல்லிய வளிமண்டலத்தில் MarBLE (Martian Boundary Layer Explorer) எனப்படும் ஹெலிகாப்டரையும் இஸ்ரோ மங்கள்யான்-2 திட்டத்தில் விண்ணில் செலுத்துகிறது.

இதுவரை அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே செவ்வாய் கிரகத்தில் லேண்டரை பத்திரமாக தரையிறக்கி உள்ளன . செவ்வாய் கிரகத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரை இறக்கி விட்டால் செவ்வாயில் தடம் பதித்த மூன்றாவது நாடாகும் இந்தியா.

இது போல எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் 2050ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற்றுவதற்காக முயற்சி செய்து வருகிறார். இப்போதைக்கு நம்ப முடியாத விஷயமாக இருந்தாலும், செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Tags :
Advertisement