விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்பு - அண்ணாமலை நேரில் ஆய்வு!
விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்புக்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாம நேரில் ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் அனுமந்தை கிராமத்தில், ஃபெஞ்சல் புயலால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்துப் பேசினோம்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தமிழக பாஜக சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினோம். புயலால் பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரை, தமிழக பாஜக அவர்களுக்கு உறுதுணையாகச் செயல்படும் என்ற உறுதியை வழங்கினோம்.
இந்தப் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மூழ்கியிருக்கும் நெற்கதிர்களை, வெள்ளத்திற்குள் இறங்கி எடுத்துக் காட்டிய விவசாயிகளின் மனவேதனையைப் புரிந்து கொள்ள முடிகிறது. பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு, தமிழக பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்ற உறுதி அளித்தோம்.
இந்தப் பகுதியில், கடந்த ஒரு வாரமாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உடனடியாக, தமிழக மின்சாரத் துறை, முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு, மின்சார வசதி கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.