வீணான ரூ.89 கோடி! : வெள்ளத்தில் மிதக்கும் பட்டாலியன் அலுவலகம்!
ராமநாதபுரத்தில் பட்டாலியன் போலீஸ் படைக்காக கட்டிமுடிக்கப்பட்ட அலுவலகம் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்கடாக காட்சியளிக்கிறது. 89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Advertisement
தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 12வது பட்டாலியன் போலிஸ் படைக்காக ராமநாதபுரம் மாவட்டம் அடுத்த சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் 79 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அலுவலகம், கவாத்து மைதானம், ஆயுதங்கள் வைப்பறை, குடியிருப்புகள் என அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 89 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டடங்கள் தற்போதுவரை பயன்பாட்டிற்கு வராத நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
கட்டி முடிக்கப்பட்டும் பயன்பாட்டிற்கு வராத நிலையில் இருக்கும் கட்டடங்கள் இருக்கும் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால் பட்டாலியன் அலுவலகம் தொடங்கி கவாத்து மைதானம் வரை அனைத்து பகுதிகளும் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டடங்களில் தேங்கிய நீரை வெளியேற்றுவதோடு, இனி வரும் காலங்களில் மழைநீர் தேங்காவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் பட்டாலின் படை குடியிருப்பு கட்டடங்களை உடனடியாக திறந்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.