வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5, 000 நிவாரணம் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!
புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5, 000 நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு 48 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால், புதுச்சேரி வெள்ளக்காடாக காட்சியளித்தது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. வெள்ளத்திற்கு 4 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5, 000 நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
கனமழையால் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். கனமழையால் உயிரிழந்த மாடுகளுக்கு தலா ரூ.40,000, ஆட்டிற்கு ரூ.20,000, படகு சேதம் அடைந்திருந்தால் ரூ.10,000, வீடு முழுமையாக சேதம் அடைந்திருந்தால் ரூ.20,000, நிவாரணமாக வழங்கப்படும் எனறும ரங்க்சாமி அறிவித்துள்ளார்.