வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகி விட்டல் குமார் கொலை வழக்கு - குற்றவாளிகளை கைது செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்!
வேலூர் மாவட்ட பாஜக ஆன்மீகப் பிரிவு நிர்வாகி V. விட்டல் குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : வேலூர் மாவட்ட பாஜக ஆன்மீகப் பிரிவு நிர்வாகி V. விட்டல் குமார், கடந்த 16.12.2024 அன்று, திமுக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து வந்த விட்டல் குமாருக்கும், வேலூர் மாவட்டம் K.V.குப்பம் மேற்கு ஒன்றியம், நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான N.பாலாசேட்டு என்ற நபருக்கும், பலமுறை வாக்குவாதங்கள் நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது.
விட்டல் குமார் படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, மாவட்ட பாஜகவினர் போராட்டமும் நடத்தினர். இந்த நிலையில், திமுக ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட்டுவின் மகனின் வாகன ஓட்டுநரும், அவரது நண்பரும், இன்று நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாகத் தெரிகிறது.
இதிலிருந்து, தவிட்டல்குமார் படுகொலையில், திமுக நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பது வெளிப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் பொதுமக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது.
திமுகவோ, தனது கட்சியில் சமூக விரோதிகளுக்குப் பதவியும் அதிகாரமும் கொடுத்து வருகிறது. உடனடியாக, விட்டல் குமார் அவர்கள் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்கள் கட்சிக்காரர்கள் என்பதற்காக சமூக விரோதிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், அதற்கான எதிர்வினைக்கும் திமுகவே பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.