3 மீட்டர் தூரத்துக்கு நகர்த்தப்பட்ட ஸ்பேடெக்ஸ்! - இஸ்ரோ
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் சோதனை முயற்சி நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ முடிவு செய்துள்ளது.
அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.
இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன.
இவற்றின் தூரத்தை 225 மீட்டராக குறைக்க முயற்சிக்கப்பட்ட நிலையில், விண்கலன்களின் இயக்கத்தின் வேகம் எதிர்பார்த்ததைவிட குறைந்ததால் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு நிகழ்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில்விண்கலன்களை 15 மீட்டர் தூரத்துக்கு நகர்த்தும் சோதனை முயற்சியில், 3 மீட்டர் தூரத்துக்கு விண்கலன்கள் நகர்த்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்கலன்கள் மீண்டும் பாதுகாப்பான தூரத்துக்கு நகரத்தப்படுவதாகவும், தரவுகளை ஆய்வு செய்த பிறகு விண்கலன்களை இணைக்கும் செயல்முறை மேற்கொள்ளப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.