ஸ்மார்ட் ஃபோனில் குழந்தைகள் கேம் விளையாடியபோது நடந்த மோசடி : 24 லட்சம் ரூபாயை இழந்த தம்பதி!
தேனி அருகே ஸ்மார்ட் ஃபோனில் குழந்தைகள் கேம் விளையாடியபோது நடந்த மோசடியில் பெற்றோர் 24 லட்சம் ரூபாயை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
தேனி மாவட்டம், தேவாரம் ஏ.ஆர்.டி காலனியில் சிவனேசன் என்பவர் பல சரக்கு கடை நடத்தி வரும் நிலையில், இவரது மனைவி அடகு கடை நடத்தி வருகிறார். இருவரும் தனித்தனியே வங்கி கணக்கு வைத்துள்ள நிலையில், 3 மாதத்திற்கு ஒருமுறை செல்போனில் உள்ள வங்கியின் செயலியை பிறர் உதவியுடன் சரிபார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் வங்கிக் கணக்கை சரிபார்த்தபோது, 21 நாட்களில் சிறிது சிறிதாக 24 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும், வங்கியில் சென்று விசாரித்தபோது 5 வங்கிகளின் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தேனி எஸ்பி அலுவலகத்தில் சிவனேசன் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சிவனேசனின் குழந்தைகள் ஸ்மார்ட் போனில் கேம் விளையாடியபோது, வங்கிக் கணக்கு விவரங்கள் வேறு மொபைலுக்கு கசிந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த அர்ஜூன் குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.