For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஹீரோ, வில்லன், காமெடி என கலக்கிய டெல்லி கணேஷ் - சிறப்பு தொகுப்பு!

07:00 PM Nov 10, 2024 IST | Murugesan M
ஹீரோ  வில்லன்  காமெடி என கலக்கிய டெல்லி கணேஷ்   சிறப்பு தொகுப்பு

நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து தமிழ் திரையுலகில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் டெல்லி கணேஷ். அவர் குறித்த சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

கொடுக்கப்படும் கதாபாத்திரங்களை உள்வாங்கி மக்கள் ரசிக்கும்படியாக நடிக்கும் குணச்சித்திர நடிகர்கள் ஆபூர்வம். அத்தகையவர்களில் தனிஇடம் பிடித்தவர்
டெல்லி கணேஷ். ஹீரோ, வில்லன், காமெடியன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கணக்கச்சிதமாக பொருந்தி நடிப்பது அவரின் சிறப்பம்சம்.

Advertisement

திருநெல்வேலியில் உள்ள பத்தமடையில் பிறந்து வளர்ந்த டெல்லி கணேஷ், தொடக்கத்தில் இந்திய வான்படையில் பணியாற்றி வந்தார். நடிப்பில் தீரா காதல் கொண்டிருந்த அவரை, பட்டின பிரவேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் கே.பாலச்சந்தர்.

1981ம் ஆண்டு வெளியான எங்கம்மா மகாராணி படத்தில் ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ், அதிகமாக நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணசித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

Advertisement

400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். திரைப்படங்களை போலவே நாடகத்துறையிலும் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'தில்லி' நாடகக் குழுவிலும் அவர் உறுப்பினராக இருந்து வந்தார். இதன் காரணமாக டெல்லி என்ற அடைமொழி அவரது பெயருடன் இணைந்துகொண்டது.

கமல்ஹாசனுடன் இணைந்து அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாதவை. மைக்கேல் மதன காமராஜன், நாயகன், அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து படங்களும் காலத்தால் அழியாதவை.

அதேபோல ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த பொல்லாதவன், படிக்காதவன், ராகவேந்திரா உள்ளிட்ட படங்களும் அவரது திரைப்பயணத்தில் முக்கிய படங்களாக அமைந்தன.

1990-களில் டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள், துணை நடிகர் மற்றும் நகைச்சுவை வேடங்களாக இருந்தன. நகைச்சுவை நடிகராக மட்டுமல்ல வில்லனாகவும் சில படங்களில் மிரட்டியுள்ளார் டெல்லி கணேஷ். 'சிதம்பர ரகசியம்', 'அபூர்வ சகோதரர்கள்' ஆகியவை அந்த பட்டியலில் முக்கியமானவை

2000ஆம் ஆண்டுக்கு பிறகு தந்தை, தாத்தா போன்ற வேடங்களில் அவர் அதிகம் நடிக்கத் தொடங்கினார். சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் தான் உள்ள இடத்தை கலகலவென வைத்திருப்பார் டெல்லி கணேஷ்.

80 வயதானபோதும் நடிப்பதில் இருந்து ஓய்வுபெற அவருக்கு மனம் வரவில்லை. ஆகவே, திரைப்படங்களில் மட்டுமல்லாது சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்து வந்தார். இறுதியாக அரண்மனை 4 படத்தில் அவர் நடித்திருந்தார்.

தற்போது இயற்கை அவருக்கு ஓய்வளித்துள்ளது. இருப்பினும் அவரது திரைப்படங்களும், அவரது தனித்துவமான நடிப்பும் தமிழ் சினிமாவில் நீடித்து நிலைத்து நிற்கும்..

Advertisement
Tags :
Advertisement