2 ஆண்டுகளில் 11,000 வழக்குகளுக்கு தீர்வு - ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெருமிதம்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தாம் பதவி வகித்த காலத்தில், யாரையாவது வேண்டுமென்றே காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு டி.ஒய். சந்திரசூட் உருக்கமாக தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பணி நிறைவு பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் நன்றியுரை ஆற்றிய அவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக தாம் பதவியேற்ற 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதியிலிருந்து நிகழாண்டு நவம்பர் 1-ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 11 ஆயிரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதனால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரமாக உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த 2 ஆண்டுகாலத்தில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறிய டி.ஒய். சந்திரசூட், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் 79 ஆயிரத்து 50 ஆக இருந்த நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் 93 ஆயிரமாக அதிகரித்ததாக குறிப்பிட்டார்.
நிகழாண்டு ஜனவரி 1-இல் இந்த எண்ணிக்கை 82 ஆயிரமாக குறைந்ததாகவும், அந்த வகையில் 2 ஆண்டுகளில் 11 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதாகவும் சந்திரசூட் பெருமிதம் தெரிவித்தார்.