2025-இல் சாதனை படைக்க தயாராகும் இஸ்ரோ - சிறப்பு தொகுப்பு!
உலகளாவிய விண்வெளித் துறையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் சாதனைகள் புரிந்துவரும், இஸ்ரோ, இந்த ஆண்டுக்கான இலட்சியத் திட்டங்களுடன் சாதனை படைக்க தயாராகி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்த மாதத்தில் , NavIC அமைப்பின் ஒரு பகுதியாக, NVS-02 என்ற செயற்கை கோளை, GSLV F15 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த உள்ளது. இந்தியா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு துல்லியமான இருப்பிட சேவைகளை வழங்குவது இதன் நோக்கமாகும்.
கடந்த ஜனவரி மாதம், இந்தியா சார்பாக ‘ககன்யான் திட்டத்தில்’ விண்வெளிக்குச் செல்லும் நான்கு இந்திய விண்வெளி வீரர்களின் பெயர்களைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பாக, சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக விண்வெளிக்கு காலி விண்கலத்தைச் செலுத்தி அதை மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வர வேண்டும். இரண்டாம் கட்டமாக, விண்வெளிக்கு ரோபோவை வைத்து ஒரு விண்கலத்தை அனுப்பி, பூமிக்கு மீண்டும் பத்திரமாக கொண்டு வர வேண்டும் என்பது இஸ்ரோவின் திட்டம். இந்த பணிகாக இஸ்ரோ உருவாக்கப்பட்ட பெண் ரோபோ தான் இந்த வயோமித்ரா.
ஆளில்லா ககன்யான் பயணத்தின் ஒரு பகுதியாக பெண் ரோபோ வயோமித்ராவை இந்த மாதம், இஸ்ரோ மூன்று நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பி, தங்க வைத்து பூமிக்கு பத்திரமாக கொண்டுவர இருக்கிறது.
அடுத்ததாக மார்ச் மாதத்தில், ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ககன்யான் G1 காலி விண்கலம் HLVM3 G1 விண்ணில் செலுத்தப் பட உள்ளது. இது இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்துக்கான ஒரு முக்கியமான சோதனையாகும்.
ககன்யான், பாரதிய அந்தரிக்ஷா நிலையம் மற்றும் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் திட்டம் ஆகிய பணிகளுக்குத் தகவல்தொடர்பு மிக முக்கியம் . எனவே, இஸ்ரோ, IDRSS-1 டேட்டா ரிலே செயற்கைக்கோளை GSLV MK II ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.
தரை நிலையங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்குப் பதிலாக, விண்கலங்கள் தங்கள் தரவுகளை ரிலே செயற்கைக்கோளுக்கு அனுப்பும். ரிலே செயற்கைக்கோள் தரவுகளை வாங்கி தரை நிலையத்துக்கு அனுப்பும்
அடுத்ததாக மார்ச் மாத இறுதிக்குள், இஸ்ரோ மற்றும் நாசாவும் இணைந்து உருவாக்கியுள்ள NISAR என்னும் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் GSLV F16 மூலம் விண்ணுக்கு அனுப்பப் பட உள்ளது. பேரிடர் மேப்பிங் என்பதுதான் NISAR பணியின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
12,505 கோடி மதிப்பில், உருவாக்கப் பட்டுள்ள NISAR உலகின் மிக விலையுயர்ந்த புவி இமேஜிங் செயற்கைக்கோளாகும். ஒவ்வொரு 12 நாட்களுக்கும் நிலம் மற்றும் பனியை ஸ்கேன் செய்யும் இந்த செயற்கை கோள் உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றங்களை புரிந்து கொள்வதற்கு உதவியாக செயல்பட போகிறது.
AST SpaceMobile பயன்பாட்டுக்காக, BlueBird 6 செயற்கை கோளை LVM3 M5 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. உலகளாவிய வணிக செயற்கைக்கோள் வரிசைகளில் இஸ்ரோவின் இந்த செயற்கை கோள் குறைந்த செலவில் நம்பகமானசேவைகளை வழங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
அதிநவீன தொழில்நுட்பங்களை நிரூபிப்பதில் கவனம் செலுத்துவதோடு, பெரிய திட்டங்களில் ஒருங்கிணைக்கும் அமைப்புகளைச் சரிபார்ப்பதற்கும் வணிக செயற்கை கோள் இஸ்ரோவுக்கு இன்றியமையாதவை ஆகும்.
PSLV C11 ராக்கெட் மூலம் Oceansat-3 செயற்கைக்கோள் இந்த ஆண்டு விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் கடல் வள மேலாண்மை, வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் தணிப்பு முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், உளவுத் துறை மற்றும் இராணுவத்துறையின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், PSLV C11 ராக்கெட் மூலம், Anvesha செயற்கை கோள் இந்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டமிடப் பட்டுள்ளது.
இராணுவ பயன்பாடுகளுக்காக சிறிய செயற்கைக்கோள் ஏவுகணை வாகனங்களை இஸ்ரோ பரீக்ஷித் மிஷன் திட்டத்தில், விண்ணில் செலுத்த இருக்கிறது.
2024 ஆம் ஆண்டில், ஆதித்யா எல்1 மற்றும் இன்சாட்-3டிஎஸ் மிஷன் உட்பட 15 திட்டங்களை இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தியது. அதற்கு முந்தைய ஆண்டில், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து சாதனை படைத்தது.
அந்த வரிசையில், இந்த ஆண்டு, நான்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள், மூன்று பிஎஸ்எல்வி ஏவுகணைகள் மற்றும் ஒரு எஸ்எஸ்எல்வி ஏவுதல் என இஸ்ரோவுக்குச் சுறுசுறுப்பான ஆண்டாகவே இருக்கப் போகிறது.
மேலும், இந்த ஆண்டு உலகளாவிய விண்வெளி ஆய்வில் ஒரு மேலாதிக்க சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்று உறுதியாக சொல்ல முடியும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.