2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - சசிகலா உறுதி!
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆமை வேகத்தில் செயல்படுவதாக வி.கே.சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.
புத்தாண்ட்டு தினத்தையொட்டி, தனது ஆதரவாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த சசிகலா, போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ,அதிமுகவில் பிரிந்த அணிகள் அனைத்தும் விரைவில் நிச்சயம் இணையும் என தெரிவித்தார். தனக்கு அரசியலில் 40 வருட அனுபவம் இருப்பதால் அதை செயலில் செய்து காட்டுவேன் என்றும் கூறினார்.
பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு, கொலைகள், என தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்கள் வெளியே செல்லவே நடுங்கி போய் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், அண்ணா பல்கலைகழக விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆமை வேகத்தில் செயல்படுவதாகவும், ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் நிலைமையே வேறு என தெரிவித்தார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என குறிப்பிட்ட சசிகலா, அண்ணா பல்கலைகழகம் உள்ளிட்ட பல்கலைகழகங்களில் உடனடியாக துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.