6ம் தலைமுறை போர் விமானம்! : இந்தியாவை நாடும் உலக நாடுகள்!
ஆறாவது தலைமுறை போர் விமானங்களை சீனா சோதனை நடத்தியுள்ள நிலையில், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து ஆறாவது தலைமுறை போர் விமானத்தை உருவாக்கும் எதிர்கால போர் விமான அமைப்புத் திட்டத்தில் சேர இந்தியாவை அழைத்துள்ளன. மாறிவரும் புவிசார் அமைப்பில், இந்தியாவின் அணுகுமுறை எப்படி இருக்கும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பொதுவாக ஆறாம் தலைமுறை போர் விமானங்கள் என்று அழைக்கப்படும் அடுத்த தலைமுறை போர் விமானங்களின் வளர்ச்சியால் ராணுவ விண்வெளித் துறை பரபரப்பாக உள்ளது. மேம்பட்ட இந்த ஆறாம் தலைமுறை விமானங்கள் வான்வழிப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்த உள்ளன.
உலகளாவிய இந்த போர் பந்தயத்தில், வளர்ந்த நாடுகள் தங்கள் லட்சிய ஆறாம் தலைமுறை போர் திட்டங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன. மிகவும் மேம்பட்ட மற்றும் திறமையான ஆளில்லா போர் விமானங்களை உருவாக்க, இந்நாடுகள் போட்டி போடுகின்றன.
அமெரிக்காவின் NGAD திட்டம், 2030 ஆம் ஆண்டுக்குள் ஆறாம் தலைமுறை போர் விமானங்களைச் செயல் பாட்டுக்குக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், அமெரிக்க கடற்படையும், தனது சொந்த ஆறாவது தலைமுறை போர் விமானத் திட்டமான F/A-XX ஐ தொடங்கிவிட்டது. அதிக செலவு காரணமாக இத்திட்டம் தாமதமாகிறது என்று கூறப்படுகிறது.
Global Combat Air Program (GCAP) என்ற திட்டம், பிரிட்டன், ஜப்பான் மற்றும் இத்தாலியின் கூட்டு முயற்சியாகும். இதுவும் ஆறாவது தலைமுறை போர் விமானத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரிட்டனில் ஆட்சி மாற்றம், நிதி ஒதுக்கீட்டில் சிக்கல் போன்ற காரணங்களால், இந்த திட்டமும் தாமதமாகிறது.
இது போல, Future Combat Air System (FCAS) என்ற திட்டம் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கூட்டுத் திட்டமாகும். ஆளில்லா 6ஆம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த திட்டமும் தாமதமாகிறது.
ரஷ்யாவின் 6ம் தலைமுறை MiG-41 திட்டம் இன்னும் முழுமையடையாத நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் தான், கடந்த டிசம்பர் மாதம் , சீனா தனது 6ம் தலைமுறை போர் விமானமான Chengdu J-36 என்ற விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, உள்நாட்டு மேம்பட்ட நடுத்தர போர் விமானம் (AMCA) திட்டத்தில் இந்தியா குறிப்பிடத்தக்கமுதலீடு செய்துள்ளது. AMCA என்பது இந்தியாவின் மிகவும் லட்சியமான பாதுகாப்பு திட்டமாகும். இந்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் இந்திய விமானப்படையும் இணைந்து இத்திட்டத்தை உருவாக்கியுள்ளன.
இது சுகோய்-57 மற்றும் எஃப்-35 போன்ற ஐந்தாம் தலைமுறை ஜெட் விமானங்களை விடவும், அதிநவீன 5.5 ஆம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2035 ஆம் ஆண்டுக்குள் முதல் AMCA முன்மாதிரியை முடிக்கவும், 2040 ஆம் ஆண்டுக்குள் ஆறாவது தலைமுறை திறன்களை ஒருங்கிணைக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த சூழலில் புதிய வான்வழி போர்களத்தில் சீனாவின் அசுர வளர்ச்சியைக் கண்டு உலகநாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. எனவே தான், உலகளாவிய போர் விமானத் திட்டத்தில் இணையுமாறு இந்தியாவை பிரிட்டன், ஜப்பான் மற்றும் இத்தாலி அழைத்த்துள்ளன. மேலும், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும், தங்கள் இந்தியாவுடன் இணைந்து 6ம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க விரும்புகின்றன.
உள்நாட்டு பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தவும், எதிர்கால விமானப் படையில், நிலையான வளர்ச்சிப் பாதையை அமைக்கவும், ஆறாவது தலைமுறை போர் விமானத் திட்டத்தில் இந்தியா இணைய வேண்டியது அவசியமாகிறது.
ஆறாவது தலைமுறை போர் விமான திட்டத்தில் சேர்வதால், இந்தியா தனது விமானப் போர் திறன்களை நவீனப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. அதே சமயம், உள்நாட்டு ராணுவ தொழில்நுட்பங்களின் வளர்ச்சி இதனால் பாதிப்படையக் கூடும் என்றும் புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.