76-வது குடியரசு தின விழா - தேசியக்கொடி ஏற்றினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!
76-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரை அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார்.
Advertisement
காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில், குடியரசு தின விழா கோலாகமாக நடைபெற்றது. தமிழக போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதல்வர் ஸ்டாலினும், அவரை தொடர்ந்து, ராணுவ வாகன அணிவகுப்புடன் ஆளுநர் ஆர்.என்.ரவியும் விழா நடைபெறும் இடத்துக்கு வருகை தந்தனர். அப்போது, ஆளுநருக்கு முதல்வர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர், முப்படை தளபதிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
இதையடுத்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விழாவில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா மற்றும், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரநிதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.