AI-யை களமிறக்கிய மத்திய அரசு : 80 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு - சிறப்பு கட்டுரை!
போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட 85 லட்சத்துக்கும் அதிகமான போலி மொபைல் இணைப்புகளை மத்திய தொலைத்தொடர்புத் துறை துண்டித்துள்ளது. சைபர் மோசடியை எதிர்த்து போராடுவதற்கும், பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தொழில்நுட்ப ரீதியாக உலகம் வேகமாக வளர்ந்து வருவதால், இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் மோசடி செய்வதற்கான மென்பொருள்களும் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலும் சைபர் மோசடிகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் (I4C) தகவலின் படி, கடந்த ஜனவரி முதல் ஏப்ரலுக்கு இடைபட்ட காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1,750 கோடி ரூபாய், சைபர் மோசடி மூலம் திருடப்பட்டுள்ளது. இதில் 85 சதவீதம் நிதி மோசடிகள் ஆகும். மேலும், அதே காலகட்டத்தில், முதலீட்டு மோசடிகளில் தொடர்பாக மொத்தம் 4,599 புகார்கள் வந்துள்ளன.
தொலைத்தொடர்புத் துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் அந்தந்த மாநில காவல்துறை ஆகியவை இணைந்து சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் தொலைத்தொடர்பு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க கூட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
சைபர் மோசடி செய்பவர்களின் வலைத் தளங்களை அகற்றி, டிஜிட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதே, இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாகும்.
இதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு டிஜிட்டல் நுண்ணறிவு தளத்தைஉருவாக்கியுள்ளது. இந்த நுண்ணறிவு தளம், நிகழ்நேர உளவுத்துறை பகிர்வு, தகவல் பரிமாற்றம், தரவுகள் பாதுகாப்பான ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த தளமாக செயல்படுகிறது.
உள்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில், சைபர் குற்றங்களில் பல மொபைல் கைபேசிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, இந்த கைபேசிகளில் 20 லட்சம் எண்கள் பயன்படுத்தப்பட்டதைக் கண்டறிந்தது.
கடந்த மே மாதம், சைபர் குற்றங்களில் ஈடுபட்டதால் நாடு முழுவதும் சுமார் 28,200 கைபேசி எண்களைத் தடைசெய்யுமாறு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
மேலும், குறிப்பிட்ட இந்த கைபேசி எண்களுடன் தொடர்புடைய 20 லட்சம் மொபைல் இணைப்புகளை உடனடியாக மறு சரிபார்ப்பு செய்யவும், தகுதியற்ற இணைப்பை துண்டிக்கவும் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஆணை பிறப்பிக்கப் பட்டது.
இந்நிலையில், மக்களவையில், போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை அல்லது சைபர் கிரைம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த, தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சத்ரா சேகர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பெறப்பட்ட 78.33 லட்சம் மொபைல் இணைப்புகள் உட்பட 85 லட்சம் மொபைல் இணைப்புகளைத் துண்டித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
போலி ஆவணங்களில் பெறப்பட்ட மொபைல் இணைப்புகளை அடையாளம் காண AI- அடிப்படையிலான கருவியை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையே, மொபைல் இணைப்புகளை வழங்குவதற்கான KYC-யை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, தொலை தொடர்பு நிறுவனம் சார்பாக, சிம் கார்டுகளை வழங்கும் franchisees, distributors, மற்றும் agents என அனைவரையும் முறையாக பதிவுசெய்யும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.
பயோமெட்ரிக் முறையில், சிம் கார்டுகள் விற்கப்படும் வணிக இடம் மற்றும் உள்ளூர் முகவரி ஆகியவை கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என்றும், ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு உரிம சேவைப் பகுதிகளில் காவல்துறையினரின் ஒப்புதல் பெற்றே சிம் கார்டு வழங்க வேண்டும் என புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து மொபைல் சந்தாதாரர்களும் மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், வரும் ஜனவரி 31ம் தேதிக்குப் பிறகும், பதிவு செய்யாமல் வாடிக்கையாளர்களைச் சேர்த்துக்கொண்டால், அந்த ஏஜென்சிக்கு ஒரு மொபைல் இணைப்புக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பழைய சிம் கார்டுகளை மாற்றவும் மிகவும் கடுமையான விதிமுறைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் காகித அடிப்படையிலான KYC நடைமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.