GLOBAL SOUTH-க்கு ஆதரவு : சீனாவிற்கு எதிரான இந்தியாவின் வியூகம் - சிறப்பு கட்டுரை!
உலகளாவிய தெற்கை ஒருங்கிணைத்தது மட்டுமில்லாமல், வசுதைவ குடும்பம் என பன்முக தன்மை கொண்ட உலகத்தின் ஒழுங்கை நிலைநாட்டியது, என்று, இந்தியாவை விஷ்வ குருவாக உலகமே ஏற்று கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை பிரதமர் மோடி உலகின் தலைமை பீடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் என்று சொல்வது போல, சமீப காலமாக குளோபல் நார்த்-குளோபல் சவுத் என்று சொல் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குளோபல் வடக்கில், அமெரிக்கா , கனடா , ஐரோப்பா , ஜப்பான் , தென் கொரியா, தைவான் , ஆஸ்திரேலியா , நியூசிலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளன. குளோபல் தெற்கில் பொதுவாக லத்தீன் அமெரிக்கா , ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் உள்ளன. குளோபல் தெற்கில் உள்ள நாடுகளும் குளோபல் வடக்கில் உள்ள நாடுகளும் நேர்மாறாக உள்ளன.
சுதந்திரம் அடைந்த பிறகும், காலனி ஆதிக்கத்தின் தொடர்ச்சியாக இன்றும் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியில் உலக தெற்கில் உள்ள நாடுகள் மிகவும் பாதிக்கப் படுகின்றன. குறிப்பாக, இந்நாடுகளில் வாழும் மக்கள் உலக அளவில் இளம் வயதினராகவும், பெரிய வாய்ப்புகள் இல்லாதவர்களாகவும், பொருளாதார ரீதியாக பிற நாடுகளைச் சார்ந்து வாழ்பவராகவும் உள்ளனர்.
இந்த நாடுகள் ஒன்றுபடுவதற்கும், ஒரே குரலில் பேசுவதற்கும் ஒரு தளத்தை வழங்குவதன் மூலம், ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் இந்தியா தன்னை அர்ப்பணித்துள்ளது.
இந்த சூழலில் தான், உலகளாவிய தெற்கிற்கான விரிவான மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட "உலகளாவிய மேம்பாட்டு ஒப்பந்தத்தை" பிரதமர் மோடி முன் மொழிந்திருக்கிறார். உலகளாவிய வளர்ச்சி ஒப்பந்தம் என்பது உலகளாவிய தெற்கு நாடுகளின் வளர்ச்சி என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
மேலும், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையின் கீழ் வர்த்தகம், நிலையான வளர்ச்சி, தொழில்நுட்ப பகிர்வு மற்றும் திட்டங்களின் சலுகை நிதி ஆகியவற்றிலும் தெற்கு நாடுகளுக்கு இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி உறுதியளித்திருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட்டில் இந்தியாவால் "ஒரு நிலையான எதிர்காலத்திற்கான அதிகாரமளிக்கப்பட்ட உலகளாவிய தெற்கு" என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட மாநாட்டில் 123 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 173 தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
சொல்லப் போனால் , உலக தெற்கின் குரலாக இந்தியா இருக்கிறது. உலகளாவிய மேடையில் இந்தியா எதையாவது சொன்னால் உலகம் கேட்கிறது.பிரேசிலில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, நைஜீரியா மற்றும் கயானாவுக்கு பயணம் மேற்கொண்டது, உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவின் ஜி 20 நோக்கமான "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்பது அடுத்தடுத்த ஜி 20 மாநாட்டிலும் தொடர்கிறது .
உலகளாவிய மோதல்களால் ஏற்படும் உணவு, எரிபொருள் மற்றும் உர நெருக்கடியால் உலகளாவிய தெற்கின் நாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வறுமை மற்றும் பசியை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய கூட்டணி பிரதமர் மோடி முன்னிலையில் தொடங்கப்பட்டது.
தெற்குலகின் பசி மற்றும் வறுமையை போக்க, சுமார் 80க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவுடன் கை கோர்த்துள்ளன. மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில், ட்ரம்ப் வெற்றி பெற்றது இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது.
அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள காலிஸ்தான் தீவிரவாத நெட்வொர்க்கை முறியடிக்கும் வாக்குறுதியை ட்ரம்ப் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேற்குலக நாடுகளில் வளர்ந்து வரும் இந்து எதிர்ப்பு மற்றும் இந்து கோயில்கள் ,இந்துக்கள் மீதான தாக்குதல்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
நைஜீரியா, ஆப்பிரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாகும். மூன்றாவது பெரிய உற்பத்தித் துறையைக் கொண்டுள்ளது. அதன் பொருளாதாரம் ஆப்பிரிக்க கண்டத்தில் நான்காவது பெரியதாக உள்ளது. அதனால் இது "Giant of Africa" என்று குறிப்பிடப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் , சீனா ஆப்பிரிக்க நாடுகளுடன் வர்த்தகத்தை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு நைஜீரியாவுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத் தக்கது. நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபுவுடனான இருதரப்பு சந்திப்பின் போது தீவிரவாதம், பிரிவினைவாதம், கடற்கொள்ளையர் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உடன்படிக்கை மேற்கொண்டனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கு நாடுகள், இந்தியாவுக்கு எதிரான ஒரு புவிசார் அரசியல் கருவியாக, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தீவிரவாதப் பிரச்சினையை எழுப்புகிறது. மேற்கத்திய நாடுகள், பெரும்பாலும் தெரிந்தோ தெரியாமலோ, இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அப்பட்டமாக விரோதமான கருத்துக்களையே கூறுகின்றன.
இங்கிலாந்தில் கூட, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து, இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது. இதனை எதிர் கொள்ளும் வகையில், எல்லை தாண்டிய தீவிரவாதத்தைத் தடுப்பதை இந்தியா தனது வெளியுறவு கொள்கையின் அடிப்படையாக மாற்றி உள்ளது.
பல்வேறு உலகத் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் இருதரப்பு சந்திப்புகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட பெரும்பாலான அறிவிப்புகளில் தீவிரவாதத்தை கண்டிக்கும் கூட்டு தீவிர வாத எதிர்ப்பு நடவடிக்கைகள் இருப்பதைக் காண முடியும்.
இன்னும் சொல்லப்போனால், பல மேற்கத்திய நாடுகள் தடுப்பூசி பதுக்கல்லில் ஈடுபட்டிருந்த நேரத்தில், சுமார் 150-க்கும் அதிகமான நாடுகளுக்கு கோவிட் தடுப்பூசிகளை இலவசமாக இந்தியா வழங்கியது. குளோபல் நார்த் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய நெட்வொர்க்குகளுக்கு வெளியே, குறிப்பாக மருந்து மற்றும் சுகாதாரத் துறைகளில் உலகளாவிய உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளை இந்தியா வெற்றிகரமாக வழிநடத்துகிறது.
ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புக்களின் மீதான நம்பிக்கை உடைந்து வரும் நிலையில்,உலகளாவிய ஒழுங்கை இந்தியா கட்டமைத்து வருகிறது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒருங்கிணைந்த குழுவாக பிரதமர் மோடி தலைமையில் உலகத் தெற்கு, உருவெடுத்துள்ளது. "விஸ்வாமித்ரா" என்ற இந்தியாவின் கீழ் உலகளாவிய தெற்கு தொடர்ந்து வலுவாக வளர்ந்து வருகிறது.
இந்தியாவுக்கு எதிராக உள்ள சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பிரதமர் மோடி தலைமையிலான குளோபல் சவுத் தடுக்க முடியாத சவால் என்று புவிசார் அரசிய வல்லுநர்கள் கூறுகிறார்கள்