HMPV வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை - மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா
HMPV வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் HMPV வைரஸ் என்ற தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.
முன்னதாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதேபோல், குஜராத்திலும் ஒரு குழந்தைக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் 7 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், HMPV வைரஸ் பரவல் தொடர்பாக அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார். இந்த வைரஸ் ஏற்கனவே 2001 ஆண்டில் கண்டறியப்பட்டதாகவும், இது புதியதல்ல என்றும் அவர் கூறினார்.
இந்த வைரஸ் முக்கியமாக குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்கத்தில் பரவும் தன்மை கொண்டது என்றும், நிலைமையை மத்திய சுகாதாரத்துறை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனமும் சூழலை கண்காணித்து வருவதாகவும், . விரைவில் அதன் அறிக்கையை அளிக்க உள்ளதாகவும் நட்டா கூறினார்.