Hyperloop ரயில் பாதை : சாதித்த மெட்ராஸ் IIT - சிறப்பு கட்டுரை!
இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் வெற்றிட ரயிலுக்கான சோதனைப் பாதையை நிறைவு செய்ததன் மூலம் இந்திய ரயில்வே மற்றும் ஐஐடி மெட்ராஸ், போக்குவரத்து தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த சாதனையை பாராட்டி, அதற்கான வீடியோவையும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
(Hyperloop) ஹைப்பர்லூப் என்பது அதிவேக வெகுஜன இரயில் போக்குவரத்து அமைப்பாகும். இது உலகளவில் குறைந்த அழுத்தக் குழாய்க்குள் காற்று தாங்கும் மேற்பரப்பால் உந்தப்படும் பெட்டிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போக்குவரத்து அமைப்பாகும்.
ஹைப்பர்லூப் ரயிலின், ஒவ்வொரு பெட்டியிலும் அதிக பட்சம் 24-28 பயணிகள் பயணிக்க முடியும். பாயிண்ட் டு பாயிண்டாக இடையில் எங்கும் நிற்காமல் குறிப்பிட்ட இலக்கை அதிவேகத்தில் சென்றடையும்.
மணிக்கு 1,100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க அனுமதிப்பதன் மூலம் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் உருவாக்கி உள்ளது.
1970-களில் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த பேராசிரியர் மார்செல் ஜஃபர் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை உருவாக்கினார். 1992ஆம் ஆண்டு, இந்த திட்டத்தை ஸ்விஸ்மெட்ரோ செயல்படுத்த முன்வந்தது. ஆனால், எதிர்பாராத நிலையில் ஹைப்பர்லூப் திட்டத்தை ஸ்விஸ்மெட்ரோ கைவிட்டது.
202Oம் ஆண்டு அமெரிக்காவின் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் , அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் 500 மீட்டர் பாதையில் பயணிகளுடன் மணிக்கு 161 கிலோமீட்டர் வேகத்தில் ஹைப்பர்லூப் ரயிலின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.
2021ஆம் ஆண்டில், ஸ்டார்லிங்க் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் ஸ்விட்சர்லாந்தில் எல்லையற்ற ஹைப்பர்லூப் சோதனைத் தடத்தை உருவாக்கினார். தொடர்ந்து 2022ம் ஆண்டில், முதல் வெற்றிட ஹைப்பர்லூப் ரயில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 3.5 மில்லியன் யூரோக்களை அரசு மானியமாக எலான் மஸ்க் பெற்றார்.
இன்றைக்கு கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட ஹைப்பர்லூப் நிறுவனங்கள், ஹைப்பர்லூப் இரயில் போக்குவரத்து அமைப்பை உருவாக்க தீவிரமாக உழைத்து வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் இன்னும் 8 ஆண்டுகளில் இந்தியாவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்திருந்தார்.
கடந்த மார்ச் மாதம், உலகின் முதல் ஹைப்பர்லூப் நிறுவனமான ஸ்விட்சர்லாந்தின் (Swisspod)
ஸ்விஸ்போட் டெக்னாலஜிஸ் நிறுவனமும், இந்தியாவின் (TuTr Hyperloop) டுட்ர் ஹைப்பர்லூப் நிறுவனமும், இந்தியாவில் அதிவேக ஹைப்பர்லூப் போக்குவரத்து அமைப்பை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
வரும் பத்தாண்டுகளில் பயணிகளின் அனுபவம் மற்றும் சரக்கு போக்குவரத்து உத்தரவாதம் போன்ற பல்வேறு அம்சங்களில் இந்த ஹைப்பர்லூப் இரயில் அமைப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று ஸ்விட்சர்லாந்து நாட்டின் தூதர் டாக்டர் ரால்ஃப் ஹெக்னர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் முழு அளவிலான முதல் ஹைப்பர்லூப் திட்டத்துக்கு, மும்பை-புனே வழித்தடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சாலை வழியாக மும்பையில் இருந்து புனே செல்வதற்கு மூன்று மணி நேரத்துக்கும் மேலாகும். ஆனால், ஹைப்பர்லூப் இரயில் மூலம் பயணித்தால், வெறும் 25 நிமிடங்களில் மும்பையிலிருந்து புனேவுக்குச் சென்று விட முடியும்.
ஹைப்பர்லூப் திட்டம் நகரங்களில் இப்போதுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹைப்பர்லூப் ரயிலுக்கான 410 மீட்டர் சோதனைப் பாதையை மெட்ராஸ் ஐஐடி வெற்றிகரமாக வடிவமைத்துள்ளது.
இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனைப் பாதை வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் .
400-மீட்டர் வெற்றிடக் குழாயைத் தயாரிப்பதற்காக 400 டன் எஃகு ArcelorMittal நிறுவனத்தால் மெட்ராஸ் ஐஐடிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.