For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

J20S போர் விமானம், மெகா அணை : சீனாவின் சவாலை சமாளிக்குமா இந்தியா ? - சிறப்பு கட்டுரை!

08:00 AM Jan 02, 2025 IST | Murugesan M
j20s போர் விமானம்  மெகா அணை   சீனாவின் சவாலை  சமாளிக்குமா இந்தியா     சிறப்பு கட்டுரை

ஆறாவது தலைமுறை போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ள சீனா, இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றில் 137 பில்லியன் டாலர் மதிப்பிலான உலகின் மிகப் பெரிய அணை கட்டும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் நீர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சீனாவின் இந்த நடவடிக்கையை இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நவீன சீனாவின் தந்தை' எனப் போற்றப்படும் மா சே துங்கின் 131வது பிறந்தநாளில், சீனா இரண்டு முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது. தனது ஆறாவது தலைமுறை போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றில் உலகின் மிகப் பெரிய அணை திட்டத்தையும் சீனா அறிவித்துள்ளது.

Advertisement

ரேடார் மற்றும் மேம்பட்ட உபகரணங்கள் மூலம் கண்டுபிடிக்க முடியாத சீனாவின் முதல் ஸ்டெல்த் வகை போர் விமானம் ஜே -20 ஆகும். இந்தப்போர் விமானங்களைச் சமாளிக்க, 2021ம் ஆண்டு 'ஆறாவது தலைமுறை' போர் விமானங்கள் மூலம் 'அடுத்த தலைமுறை வான்வெளி ஆதிக்கம்' (NGAD) என்ற திட்டத்தை அமெரிக்கா அறிவித்தது. 2031 ஆம் ஆண்டுக்குள், இந்த போர் விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அமெரிக்க விமானப்படை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஆறாவது தலைமுறை போர் விமானத்தின் முதல் விமானம் பறந்த வீடியோவை சீனா வெளியிட்டுள்ளது. சீன வான்வெளியில் காணப்பட்ட இந்தப்போர் விமானம் அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. ட்ரோன்களுடன் தடையற்ற ஒருங்கிணைப்புடன் செயல்படும் இந்த புதிய விமானம், நவீன வான்வழிப் போர்களில் விமானிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதிக தொலைவில் உள்ள இலக்குகளையும் கண்டறிந்து தாக்கும் அதிநவீன ரேடார் அமைப்புகளுடன் இந்த விமானம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இரண்டு இருக்கைகள் கொண்ட Chengdu J-20S போர் விமானம், அடுத்த தலைமுறை போர் தொழில்நுட்பத்துக்கான போட்டியில் அமெரிக்காவை சீனா முந்துகிறது என்று கூறப்படுகிறது.

இது உலகின் முதல் ஆறாவது ஜென் போர் விமானம் என்றும், இது அமெரிக்காவின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏர் டாமினன்ஸ் (NGAD) ஜெட் திட்டத்துடனான நேரடிப் போட்டியாகும்.

இந்நிலையில், இந்தியாவின் Advanced Medium Combat Aircraft (AMCA), 5.5-தலைமுறை ஸ்டெல்த் வகை போர்விமானம் இன்னமும் தயாரிப்பு நிலையிலேயே உள்ளது. தனது விமானப்படையை நவீனமயமாக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. எனவே, இந்த திட்டத்தில், தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்துவது குறித்த முடிவை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு புறம், இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றில் சுமார் 137 பில்லியன் டாலர் மதிப்பிலான அணையைக் கட்டும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. 60,000 மெகாவாட் திறன் கொண்ட இந்த அணை, இது உலகின் மிகப்பெரியது என்பது குறிப்பிடத் தக்கது.

கடந்தவாரம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு மந்திரி வாங் யீ இடையே சிறப்பு பிரதிநிதி அளவிலான நாடு கடந்த நதிகளின் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அணைகட்டும் திட்டத்தை சீனா அறிவித்திருப்பது, இந்தியாவுக்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

நில அதிர்வு மண்டலத்தில் இந்த அணை கட்டப்படுவதால், இந்தியாவில் நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மேற்குவங்கத்தில், விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சீனாவின் போர் விமானம் மற்றும் அணை அறிவிப்புகள் இந்தியாவுக்கான எச்சரிக்கையாக தான் பார்க்கப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை ஆகியவற்றில் இந்தியா இன்னும் விரைவாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சீனாவை விட பல மடங்கு வேகத்தில் ராணுவ தளவாட உற்பத்திகளில் இந்தியா வளர்ந்து வருகிறது. கூடவே, சீனாவுடன் வெளிப்படையான நீர் பகிர்வு ஒப்பந்தங்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது இந்தியா. இந்தியாவுக்கு சவால் விடும் சீனாவின் மேலாதிக்கம் எடுபடாது என்றே புவிசார் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Advertisement
Tags :
Advertisement