Open AI சுசீல் பாலாஜி கொலை செய்யப்பட்டாரா? FBI விசாரணை கோரும் பெற்றோர் - சிறப்பு கட்டுரை!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ குடியிருப்பில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் சுசீர் பாலாஜியின் பெற்றோர், தங்கள் மகன் கொலை செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக FBI விசாரணைக்கும் கோரிக்கை வைத்துள்ளனர். சுசீல் பாலாஜி மரணத்தில் உள்ள மர்மம் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
OpenAI நிறுவனத்தில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த சுசீர் பாலாஜி, ChatGPT க்கான தரவு சேகரிப்பில் முக்கிய பங்காற்றினார். OpenAI அமெரிக்க காப்புரிமையை மீறியதைக் கண்டு பிடித்தார். அதனால், 2023ம் ஆண்டு OpenAI யிலிருந்து விலகினார்.
இணையத்தில் ஏற்கெனவே இருக்கும் தகவல்களைக் கொஞ்சம் மாற்றி ஏ.ஐ தருகிறது என்றும், இது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது என்றும் பத்திரிக்கைக்குப் பேட்டி கொடுத்தார். தனது எக்ஸ் பக்கத்திலும் இது குறித்து விவரமாக எழுதி இருந்தார்.
இதனால், சுசீர் பாலாஜிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டல்கள் வந்ததாக கூறப்பட்டது. கடந்த
நவம்பர் மாதம் கடைசியில், சுசீர் பாலாஜியிடம் இருந்து, எந்த தகவலும் வரவில்லை. சந்தேகத்தின் பேரில், சுசீர் பாலாஜியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, விசாரணைக்குச் சென்ற காவல்துறையினர், சான் பிரான்சிஸ்கோ வீட்டில், இறந்து கிடந்த சுசீர் பாலாஜியின் உடலை மீட்டெடுத்தனர். தொடர்ந்து, நடந்த விசாரணையில், சுசீர் பாலாஜி தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் வழக்கை முடித்தனர்.
சுசீர் பாலாஜியின் குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கியின் கைரேகையின் தடயவியல் அறிக்கையும் பிரேத பரிசோதனை அறிக்கையும் அதிகாரப் பூர்வமாக இன்னும் வரவில்லை.
இந்நிலையில் தான், சுசீர் பாலாஜியின் பெற்றோர், தற்கொலை அல்ல கொலை என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் FBI விசாரணைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தனிப்பட்ட முறையில் இரண்டாவது முறையாக உடலை பிரேத பரிசோதனை செய்ததாகவும், புதிய தகவல்கள் கிடைத்ததாகவும் கூறியுள்ள சுசீர் பாலாஜியின் தாயார், ஆனால், மரணத்துக்கு காவல்துறையினர் கூறிய காரணங்களோடு ஒத்து போகவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமாசாமியை டேக் செய்து, இதை பதிவிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், சுசீர் பாலாஜியின் மரணம் தற்கொலை போல தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
தனது மகனின் அடுக்குமாடி குடியிருப்பு சூறையாடப்பட்டதாகவும்,பென் டிரைவ் காணாமல் போயிருப்பதாகவும், குளியலறையில் தனது மகன் தாக்கப்பட்டதாகவும், அதற்கான ரத்தக் கறைகள் இருந்ததாகவும் சுசீர் பாலாஜியின் தாயார் கூறியுள்ளார்.
சுசீர் பாலாஜியின் பெற்றோருடன் விசாரணைக்குச் சென்ற புலனாய்வு பத்திரிகையாளர் ஜார்ஜ் வெப், இது தற்கொலை அல்ல கொலைதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்த்து போராடிய சுசீர் பாலாஜியின் மரணம் 'கொலையா, தற்கொலையா?' என்பது கேள்வியாகவே இருந்து விட கூடாது என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு.