For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

PM E-DRIVE திட்ட புரட்சி : மின்சார வாகனம் வாங்க சலுகை பெறுவது எப்படி? - சிறப்பு கட்டுரை!

07:00 PM Dec 21, 2024 IST | Murugesan M
pm e drive திட்ட புரட்சி   மின்சார வாகனம் வாங்க சலுகை பெறுவது எப்படி    சிறப்பு கட்டுரை

பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, PM E-DRIVE என்ற புதுமையான வாகன மேம்பாட்டின் திட்டத்தில் கீழ் மின்சார வாகனப் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கான ஊக்கத்தொகையையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலக வெப்பமயமாதல் காரணமாக பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

Advertisement

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் கொண்ட வாகனங்களின் பயன்பாட்டினால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனாலேயே உலகில் வெப்பம் அதிகரிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை காக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது தான் மின்சார வாகனங்கள். மின்சார வாகனங்கள் அறிமுகமான உடனேயே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

கடந்தாண்டு 5.80 இலட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று IEA எனும் சர்வதேச எரிசக்தி நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சீனாவின் விற்பனையை விட இது பன்மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. மத்திய அரசின் ஊக்கத்தொகை, மின்சார வாகனங்களின் விலையை குறைக்கப் பெரிதும் உதவியதன் காரணத்தால் தான் இந்தியாவில் மின்சார வாகனங்களில் விற்பனை அதிகரித்துள்ளது.

Advertisement

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக இந்தியாவை மேம்படுத்த மின்சார வாகன கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்அளித்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் மாதம், நாட்டில் மின்சார இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக, "புதுமையான வாகன மேம்பாட்டில் PM E-Drive என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான கனரக தொழில்கள் அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த புரட்சிகர திட்டத்துக்காக 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கு 10,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

மின்சார 2 சக்கர வாகனங்கள், மின்சார 3 சக்கர வாகனங்கள், மின்சார ஆம்புலன்ஸ்கள், மின்சார டிரக்குகள் மற்றும் பிற வளர்ந்து வரும் மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக 3,679 கோடி ரூபாய் மதிப்பிலான மானியங்கள், ஊக்கத்தொகைகள் இந்த திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

PM E-DRIVE திட்டத்தின் கீழ் 14,028 இ-பேருந்துகள், 2,05,392 மின்சார 3 சக்கர வாகனங்கள், 1,10,596 இ-ரிக்ஷாக்கள் மற்றும் இ-கார்ட்கள் மற்றும் 24,79,120 மின்சார 2 சக்கர வாகனங்கள் தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, இ-டிரக்குகள், இ-ஆம்புலன்ஸ்கள், EV பொது சார்ஜிங் நிலையங்கள் மற்றும் சோதனை முகவர் நிலையங்களை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகின்றன.

மின்சார ஆம்புலன்ஸ்களைத் தயாரிக்க 500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. நோயாளிகளின் வசதியான போக்குவரத்துக்கு இ-ஆம்புலன்ஸ் பயன்பாடு, பிரதமர் மோடியின் புதிய முயற்சியாகும்.

அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து முகமைகள் மூலம் 14,028 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்ய 4,391 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், சூரத், பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒன்பது நகரங்களில், INTER CITY மற்றும் INTER STATE ((இன்டர்சிட்டி மற்றும் இன்டர்ஸ்டேட்)) மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப் பட்டுள்ளது.

PM E-DRIVE திட்டத்தின் கீழ், தேவையான அரசு சலுகைகளைப் பெற EV வாங்குபவர்களுக்கு e-Voucher களை மத்திய அரசு அறிமுகப் படுத்தியுள்ளது. மின்சார வாகனங்களை வாங்குவர்கள் PM E-DRIVE app மூலம் ஆதார் e-KYC அங்கீகாரத்தை முடித்த பிறகு, ஆதார் எண் அங்கீகரிக்கப்பட்ட e-Voucher கிடைக்கும். இந்த e-Voucher குறிப்பிட்ட நபரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப் படும்.

மேலும், பொது மின்னேற்ற நிலையங்கள் அதிக EV பயன்பாடு உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுஞ்சாலைகளிலும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மின்சார நான்கு சக்கர வாகனங்களுக்காக 22,100 ஃபாஸ்ட் சார்ஜர்களும், மின்சார பேருந்துகளுக்காக 1800 ஃபாஸ்ட் சார்ஜர்களும், மின்சார 2 சக்கர, மின்சார 3 சக்கர வாகனங்களுக்காக 48,400 ஃபாஸ்ட் சார்ஜர்களும் உருவாக்கப்பட உள்ளன. மின்சார வாகன பொது மின்னேற்ற மையங்களுக்கான செலவு மட்டும் 2,000 கோடி ரூபாய் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வளர்ந்து வரும் EV சுற்றுச்சூழல் அமைப்பைக் கருத்தில் கொண்டு, பசுமை இயக்கத்தை ஊக்குவிக்க, புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கையாள்வதற்கு சோதனை முகமைகள் நவீனமயமாக்கப்படும் என்றும், அதற்காக 780 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பரிசோதனை முகமைகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் PM E-DRIVE திட்டம், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்கிறது. இந்தத் திட்டத்தால் EV துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய வணிக சந்தைகளில் முதலீட்டை ஈர்க்கிறது. இந்தத் திட்டம், பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்குகிறது.

Advertisement
Tags :
Advertisement